Friday, December 25, 2009

கொள்ளையடிக்கும் ஜனநாயகம்

திருச்செந்தூர், வந்தவாசி தேர்தல் முடிவுகள் ஒரு உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கின்றன; தி.மு.க.அரசின் சாதக பாதக அம்சங்களின் அடிப்படையில் இந்த முடிவுகள் அமையவில்லை; பணம் கொடுத்து வாங்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையிலே அமைந்திருக்கின்றன மக்களின் ஏழ்மை நிலையையும் அறியாமையையும் பயன்படுத்தி தேர்தல் சமயத்தில் அவர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ2000, 3000 என வழங்கி அவர்கள்டமிருந்து ஆட்சிக்கு சாதகமான முடிவு வாங்கப்படுகிறது. திருமங்கலம் தொட்டு ந்டந்து முடிந்திருக்கும் உபதேர்தல்கள் வரை, அசாதாரண் முறையில் அதிக அளவு வாக்குகள் பதிவாகியிருப்பதும், மிக அதிக அளவு வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற்றிருப்பதும் இந்த உண்மைக்கு தெளிவான நிருபண்மாகும்.இப்போக்கு மிகவும் ஆபத்தானது. இது ஜனநாயகத்திற்கும், மக்களாட்சி தத்துவத்திற்கும் ஒரு கேன்சர் மாதிரி. தமிழகத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த தீய கலாச்சாரம் பிற மாநிலங்களுக்கும் கேன்சர் போல பரவும். பின்பு நாட்டில் ஜனநாயகம் இருக்காது; பணநாயகம்தான் இருக்கும்ஆட்சியிலிருக்கும்போது மக்களின் பணத்தை கோடி கோடியாய் கொள்ளையடித்து, அதில் ஒரு சிறு பகுதியை தேர்தலின்போது அதே மக்களுக்கு கொடுத்து, அவர்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து வாக்குகளைப் பெற்று, மீண்டும் வெற்றி பெற்று மீண்டும் மக்கள் பண்த்தை கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் இம்முறையே அரசியலிலும் ஆட்சியிலும். நீடித்திருக்க ஏற்ற எளிய முறை என அனைத்துக் கட்சிகளும் எண்ணத் தலைப்பட்டுவிடுவார்கள். பின்பு மக்களின் கதி அதோ கதிதான். தேர்தல் மூலம் அல்லாமல் ஆயுதங்கள் மூலம் மாற்றம் காண விரும்பும் சக்திகளின் ஆதிக்கம் மேலோங்க ஆரம்பிக்கும். சில உபதேர்தல்கள் முடிவை வைத்து இப்படியாகும் அப்படியகும் என்றெல்லாம் விவரிப்பது சிலருக்கு தமாஷாக தெரியலாம்; ஆனால், பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் இப்போக்கு தொடர்வது நிச்சயம் மேலே கூறிய நிலைக்குத்தான் நாட்டை கொண்டு செல்லும்.
எனவே, இந்த தீய போக்கிற்கு முடிவு கட்ட வேண்டியது அனைவரின் பொறுப்புமுமாகும். அரசியல் மற்றும் பிற வேறுபாடுகளை மறந்து அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் இதற்காக ஒன்றுபட வேண்டியது உடனடித் தேவையாகும். மக்களும் பணத்திற்காக வாக்களிக்கும் போக்கை நிறுத்த வேண்டும். பணத்திற்காக தன் ஓட்டை விற்பவர்கள் தன் தலையில் தானே மண்ணை அள்ளி கொட்டிக் கொள்கிறார்கள் என்று பொருள். அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் அதைவிட பெரிய அளவில் பொருளாதார இழப்புக்காளாவார்கள். எந்த அரசியல்வாதியும் தனது சொந்த பணத்தை ஓட்டுக்காக அளிப்பதில்லை; தாங்கள் மக்கள் வரிப்பணத்தில் கொள்ளையடித்த பணத்தில் ஒரு சிறு பகுதியைத்தான் அளிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் பணத்தின் மூலம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவுடன் கொடுத்ததை விட பன்மடங்காக மக்கள் பணத்தை மீண்டும் கொள்ளையடிப்பார்கள். என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஓட்டுக்காக பணம் கொடுத்தால் வாங்க மறுப்பது என்பது சரியான நிலைப்பாடு; ஆனால், நாட்டில் நிலவும் வறுமை அறியாமை கலந்த இச்சூழ்நிலையில் இத்தகைய நிலையை அனைத்து மக்களும் கடைப்பிடிப்பது என்பது அரிது; இயலாததும் கூட. எனவே, இப்போதைய சூழ்நிலையில் சாத்தியமானது இதுதான். பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்; ஆனால், வாக்களிக்கும்போது எதிர்த்து வாக்களியுங்கள்; தவறான, முறைகேடான அரசியல் சக்திகளுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்.

Monday, December 7, 2009

த‌வ‌றான‌ சிந்த‌னைக‌ள் ; விப‌ரீத‌மான‌ முடிவுக‌ள்.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா காஷ்மீர் பிரச்னை சம்பந்தமாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவினைவாத அமைப்புகள் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று கூறியிருக்கிறார். காஷ்மீர் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று; ஆனால் காஷ்மீர் சம்பந்தமாக அந்த மாநிலத்து முதலமைச்சரே அண்டை நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுவது விபரீதமாயிருக்கிறது. ஓமர் அப்துல்லாவின் இந்தக் கூற்றை மத்திய அரசு கண்டிக்காமலிருப்பது அதை விட விபரீதமாயிருக்கிறது. ஓமர் அப்துல்லா காங்கிரசின் கூட்டணியோடுதான் ஆட்சியிலிருக்கிறார் என்பதும இங்கு நினைவில் கொள்ளப்பட வேண்டும். பிற மாநிலங்களைப் போலவே ஜம்மு காஷ்மீரும் இந்தியவின் ஒரு அங்கம்; இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ பாகிஸ்தானுட‌னோ அல்ல‌து எவ‌ருட‌னோ எவ்வித‌ பேச்சுவார்த்தையும் கிடையாது; பேச்சுவார்த்தை என்ப‌து பாகிஸ்தானால் ஆக்ர‌மிக்க‌ப்ப‌ட்டிருக்கும் ஆக்ர‌மிப்பு காஷ்மீர் ச‌ம்ப‌ந்த‌மாக‌ ம‌ட்டுமே ந‌டைபெற‌ முடியும் என்ற‌ உறுதியான‌ நிலைப்பாடு வேண்டும். ஆனால், ம‌த்திய‌ அரசே, ஜ‌ம்மு காஷ்மீர் ஒரு பிர‌ச்னைக்குரிய‌ ப‌குதி என்ற‌ க‌ருத்துட‌னிருப்ப‌தால்தான் ஒம‌ர் அப்துல்லா போன்ற‌வ‌ர்க‌ள் இப்ப‌டியெல்லாம் பேச‌ முடிகிற‌து.1948 லிருந்தே ஜ‌ம்மு காஷ்மீரில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌மும் பிரிவினைவாத‌மும் நீடித்து நிலைத்திருப்ப‌த‌ற்கு அர‌சின் இத்த‌கைய‌ எண்ண‌மே பிர‌தான‌ கார‌ண‌ம். இந்நிலையில், காஷ்மீரில் பிரிவினைவாத‌ அமைப்புக‌ளோடு இர‌க‌சிய‌மாக‌ பேச்சுவார்த்தை ந‌ட‌ந்து வ‌ருவ‌தாக‌ செய்திக‌ள் கூறுகின்ற‌ன‌. காஷ்மீரில் செய‌ல்ப‌ட்டுக் கொண்டிருக்கும் ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளை த‌ய‌வுதாட்ச‌ண்ய‌மின்றி ஒழித்துக் க‌ட்டுவ‌தோடு, ஹூரிய‌த் மாநாடு, ஜெ.கே.எல்.எப்.போன்ற‌ பிரிவினைவாத‌ அமைப்புக‌ளையும் க‌டும் ந‌ட‌வ‌டிக்கைகளின் மூலம் ஒடுக்க‌ வேண்டும்.அர‌சிய‌ல் ச‌ட்ட‌ம் 370 வ‌து பிரிவின் கீழ் அளிக்கப்ப‌ட்டிருக்கும் சிற‌ப்பு அந்த‌ஸ்து ப‌டிப்ப‌டியாக‌ நீக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.இப்படிப்பட்ட உறுதியான அணுகுமுறைகள்தான் காஷ்மீர் பிர‌ச்னைக்கு நிஜ‌மான‌ தீர்வைத் த‌ருமே த‌விர‌, பேச்சுவார்த்தைக‌ளின் மூல‌ம் இன்னும் கூடுத‌லான‌ அதிகார‌ங்க‌ளையும் ச‌லுகைக‌ளையும் வ‌ழ‌ங்கி மாநில‌த்தில் அமைதிக்கு வ‌ழிவ‌குக்க‌ முடியும் என்று அர‌சு நினைத்தால் அது ப‌கல் க‌ன‌வாக‌த்தானிருக்கும். நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அது மிக‌ப்பெரிய‌ ஆப‌த்தையும் உண்டாக்கும்.

Monday, October 5, 2009

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று. இம்மாநிலத்தில் இஸ்லாமியர்கள் ஓரளவு அதிகமாயிருக்கிற ஒரே காரணத்தை அடிப்படையாக வைத்து பாகிஸ்தான் இம்மாநிலத்தை பிரச்னைக்குரிய பகுதியாக சித்தரித்து, இதை இந்தியாவிலிருந்து துண்டாட பல்வேறு சதிவேலைகளில் ஈடுபட்டு வருகின்றது. கடந்த பல வருடங்களாக பாகிஸ்தான் இஸ்லாமிய ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளுக்கு த‌ன் நாட்டில் செய‌ல்ப‌டும் ப‌யிற்சி முகாம்க‌ளில் ஆயுத‌ப் ப‌யிற்சி அளித்து அவ‌ர்க‌ளை காஷ்மீருக்குள் ஊடூருவ‌ வைத்து ப‌ய‌ங்க‌ர‌வாத‌ச் செய‌ல்க‌ளில் ஈடுப‌ட‌ வைக்கிறது. சமீப காலமாக சீனா போன்ற நாடுகளும் காஷ்மீரை துண்டாட பல்வேறு காரியங்களில் ஈடுபட்டு வருகின்றன. சீனா காஷ்மீர் பகுதியிலிருந்து தன் நாட்டிற்குள் பயணம் செய்ப‌வ‌ர்க‌ளுக்கு த‌னி விசா வ‌ழ‌ங்குகிற‌து; இதும‌ட்டுமின்றி, லிபிய‌ அதிப‌ர் க‌டாபி ஐ.நா. பொதுப் பேர‌வை கூட்ட‌த்தில், காஷ்மீர் த‌னி நாடாக‌ வேண்டும் என்று உரையாற்றியிருக்கிறார்; இஸ்லாமிய‌ நாடுக‌ளின் கூட்ட‌மைப்பு காஷ்மீருக்கென்று த‌னி தூத‌ரை அறிவித்திருக்கிற‌து. ம‌த்திய‌ ஐ.மு.கூ. அர‌சின் த‌வ‌றான‌ ம‌ற்றும் ப‌ல‌வீன‌மான‌ கொள்கைக‌ளும் செய‌ல்பாடுக‌ளுமே இந்நிலைக்கு பிர‌தான‌ கார‌ண‌ம் என்று கூறினால் அதில் பெரும் த‌வ‌றேதுமிருக்க‌ முடியாது. பிற‌ மாநில‌ங்க‌ளைப் போல‌வே காஷ்மீரும் இந்தியாவின் பிரிக்க‌ முடியாத‌ ஒருங்கிணைந்த‌ ப‌குதியாகும். இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ எவ்வித‌ பேச்சுவார்த்தையும் எவ்ருட‌னும் கிடையாது என்ற‌ உறுதியான‌ நிலைப்பாடு வேண்டும்; மேலும், பாகிஸ்தானால் ஆக்ர‌மிக்க‌ப்ப‌ட்டிருக்கும் காஷ்மீர் ப‌குதியும் இந்தியாவுக்குரிய‌தாகும்; அதை மீட்ப‌த‌ற்குரிய‌ அனைத்து ந‌ட‌வ‌டிக்கைக‌ளும் மேற்கொள்ள‌ப்ப‌ட‌ வேண்டும். காஷ்மீர் ப‌குதியில் செய‌ல்ப‌ட்டுக் கொண்டிருக்கிற‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ அமைப்புக‌ளை க‌டுமையான‌ இராணுவ‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளின் மூல‌ம் நிர்மூல‌மாக்குவ‌தோடு, பிரிவினைக்கு ஆத‌ர‌வான‌ ம‌க்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌ க‌ட்சி, அனைத்துக் க‌ட்சி ஹூரிய‌த் மாநாடு, ஜெ.கெ.எல்.எப். போன்ற‌ அமைப்புக‌ள் மீதும் கடும் ந‌ட‌வ‌டிக்கைகள் மேற்கொள்ள‌ வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு சிற‌ப்பு அந்த‌ஸ்து அளிக்கிற‌ அர‌சிய‌ல் ச‌ட்ட‌த்தின் 370 வ‌து பிரிவை சிறிது சிறிதாக‌ நீர்த்துப் போக‌ வைத்து ஓரிரு வ‌ருட‌ங்க‌ளில் முற்றிலுமாக‌ நீக்கப்ப‌ட‌ வேண்டும். இதுபோன்ற‌ உறுதியான‌ ந‌ட‌வ‌டிக்கைகளினாலேயே ஜம்மு காஷ்மீரை பாதுகாக்க முடியும். தேசத்தின் எல்லைகளை பாதுகாப்பதிலும், ஒருமைப்பாட்டை நிலை நிறுத்துவதிலும் எவ்வித சமரசத்திற்கும் இடமற்ற கடுமையான அணுகுமுறை வேண்டும். இதன் மூலமே நமது எதிரிகளை நாம் புறம் தள்ளி நமது நாட்டை வல்லரசாக்க முடியும்.

Tuesday, September 8, 2009

சீனாவின் அராஜகம்

காஷ்மீரிலுள்ள லடாக் பகுதியில், சீனா தொடர்ந்து அத்து மீறல்களில் ஈடுபட்டு வருகிறது; இந்தியாவின் வான்வெளிக்குள் சீனா ஹெலிகாப்டர்கள் ஊடுருவியிருப்பதோடு இந்திய நிலப் பகுதிக்குள்ளும் 1 1/2 கிலோ மீட்டர் தூரம் வரை சீனப்படைகள் நுழைந்து தங்களது கொடியை வரைந்து வைத்து விட்டு சென்றிருக்கின்றன. இதற்கு முன்பு அருணாச்சலப் பிரதேசப் பகுதிக‌ளிலும் சீனா இதுபோன்ற அத்து மீறல்களில் ஈடுபட்டிருக்கிறது. சீனா கடைப்பிடிக்கிற மிரட்டல் தந்திரம் இது. இந்தியா இதற்கு தகுந்த பதிலடி கொடுப்பது அவசியம்.சீன தூதரை வரவழைத்து கடும் கன்டனம் தெரிவிப்பதோடு, இனியும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால், பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று உறுதியாக எச்சரிக்க வேண்டும். ஆனால் இந்திய ஐ.மு.கூ.அரசு இந்த விஷயத்தில் மழுப்பலான நிலையையே கடைப்பிடிக்கிறது. இதை பூசி மெழுக முயற்சிப்பது போலவே தெரிகிறது. வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இது ஒரு பெரிய விஷயமல்ல என்பது போல் பேசியிருக்கிறார். இந்த விஷயத்தை இப்படிப்பட்ட ரீதியில் அணுகும்போது சீனா தைரியம் பெற்று மேலும் மேலும் ஊடுருவல்களை நடத்தத் துவங்கும். எனவே எல்லையில் நிகழும் அத்து மீறல்களுக்கு எதிராக அரசு கடும் நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் எல்லைக்குள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்தாலும், பாகிஸ்தானே வாலாட்டினாலும், சீனா ஆக்ரமிப்பு செய்ய முயற்சித்தாலும் கடுமையான பதிலடி கிடைக்கும் என்பதை தனது செயல்பாடுகளில் ஐ.மு.கூ. அரசு காட்ட வேண்டும். இவைகள் ஒரு புறமிருக்க, உலகின் எங்கெங்கோ நடக்கிற சம்பவங்களுக்கு எதிராக,இந்தியாவில் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிற கம்யூனிஸ்ட்கள் இந்தியாவுக்கு எதிரான் சீனாவின் ஆக்ரமிப்பு முயற்சிகளுக்கு எதிராக வாயை மூடிக் கொண்டு மௌனம் காக்கிறார்களே ஏன்..? கம்யூனிஸ்ட்களுக்கு தாய் நாடு சீனாவா.. இந்தியாவா..? 1962ல் இந்தியா மீது சீனா ஆக்ரமிப்பு செய்த போது, சீனாவின் ஆக்ரமிப்பு சரியென்ற் நிலை எடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்கள். அவர்களது சீன விசுவாசம் இன்னும் போகவில்லை என்பது கவலைக்குரிய விஷயம். ஆனால், இந்திய மக்கள் தேசத்திற்கு ஆபத்து எனும்போது, தங்கள் வேறுபாடுகளையும் பிரச்னைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, ஓரணியாய்த் திரண்டு, தேச விரோதிகளையும், தேசத் துரோகிகளையும் முறியடிப்பார்கள் என்பது உறுதியான விஷயம்.

Thursday, August 20, 2009

விலைவாசி உயர்வு.

அத்யாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் மிகவும் அதிகரித்து வருகிறது. நாட்டின் உச்ச நீதிமன்றமே இப்பிரச்னையில் தலையிடுமளவுக்கு இது புதிய பரிமாணத்தை அடைந்திருக்கிறது. சென்ற வருடத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9% என்ற அளவை எட்டியிருந்த போது, இத்தகைய வளர்ச்சியோடு இணைந்து விலைவாசிகளும் உயரத்தான் செய்யும் என்று அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பொருளாதார விற்பன்னர்களும் வியாக்கியானம் அளித்திருந்தனர். இப்போது பொருளாதார வளர்ச்சி மந்தமான நிலையில் இருக்கிறது; பணவீக்கமும் மைனஸில் இருக்கிறது. ஆனால் இப்போதும் விலைவாசிகள் மட்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டுதானிருக்கின்றன.உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் விலை பெரிதாக உயர்ந்து விடாத நிலையிலேயே மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் டீச‌ல் மீது அப‌ரிமித‌மான‌ விலையுய‌ர்வை அறிவித்த‌து.இது ஏற்க‌ன‌வே உய‌ர்ந்து கொண்டிருந்த‌ விலைவாசிக்கு மேலும் ஒரு தூண்டுகோலாய் அமைந்த‌து. ம‌க்க‌ளின் வாங்கும் ச‌க்தி குறைவாயிருக்கிற‌ இக்கால‌ க‌ட்ட‌த்தில் விலைவாசிக‌ள் இப்ப‌டி இற‌க்கை க‌ட்டி ப‌ற‌ந்து கொண்டிருப்ப‌து அனைத்து ம‌க்க‌ளின் வாழ்க்கைத் த‌ர‌த்தையும் பெரிதும் பாதித்திருக்கிற‌து.த‌மிழ‌க‌ அர‌சு ரேஷ‌ன் க‌டைக‌ளில் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வ‌ழ‌ங்குவ‌தோடு விலைவாசிக‌ளை க‌ட்டுப்ப‌டுத்தும் ந‌ட‌வ‌டிக்கைக‌ள் முடிந்து விட்ட‌து என்று நினைத்துக் கொள்கிற‌து; வெளி ம‌ர்க்கெட்டில் ம‌ற்ற‌ பொருள்க‌ளின் விலைக‌ள் எவ்வ‌ள‌வு உய‌ர்ந்தாலும் அல‌ட்டிக் கொள்ளாம‌ல் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வ‌ழ‌ங்கிய‌ அர‌சு என்று உர‌க்க‌ முழ‌ங்கி ஏதோ த‌மிழ் நாட்டில் விலைவாசி உய‌ர்வு என்ற‌ துன்ப‌மே ம‌க்க‌ளை பாதிக்க‌வில்லை என்ப‌து போல‌ ஒரு மாயையை உருவாக்கி வ‌ருகிற‌து. 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வ‌ழ‌ங்குத‌ல் என்ப‌து ந‌ல்ல‌ திட்ட‌மே. ஆனால், இத்திட்ட‌த்தின் மூல‌ம் பெரும்பாலான‌ இட‌ங்க‌ளில் தரம் குறைந்த அரிசியே வ‌ழ‌ங்க‌ப்படுவதால் மக்கள் இதை உணவிற்காக பயன்படுத்துவது மிகவும் குறைவாகவேயிருக்கிறது. மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 1 கிலோ அரிசி ரூ 3.50 ஆக இருந்தது; இப்போது ரூ 1 ஆகியிருக்கிறது. இதன் மூலம் மக்களுக்கு 1 மாதத்தில் மீதமாகும் தொகை 2.50*20 வெறும் 50 மட்டுமே; ஆனல், மற்ற பொருள்களின் அதிகபட்ச விலை உயர்வால் ஏற்படும் பொருளாதரப் பிரச்னையில் சிக்கி இந்த 50 ரூபாய் இலாபம் என்பது காணாமல் போய்விடுகிறது.தென்மேற்கு பருவ மழை இந்த வருடம் வழக்கத்தை விட குறைவாக பெய்திருக்கிறது; வட மாநிலங்களும் குறைவான மழைப் பொழிவையே பெற்றிருக்கின்றன; இதனால் உணவுப் பொருள்களின் உற்பத்தி குறையக் கூடும். விலைவாசிகள் மேலும் உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர். எனவே மத்திய மாநில அரசுகள் விலைவாசிகளை கட்டுப்படுத்துவதில் உடனடி தீவிர நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். வெறும் அறிக்கைகளும் உறுதிமொழிகளும் எந்த பயனையும் தந்து விடப்போவதில்லை. பயன்தரத்தக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையே மக்கள் விரும்புகிறார்கள். கடந்த ஆட்சியிலும் கூட விலைவாசிகள் உயரத்தான் செய்தன என்று புள்ளி விவரங்களை அடுக்கி மக்களை ஏமாற்றாமல் பிரச்னையின் தீவிரத்தன்மையை உணர்ந்து, அதற்கு தீர்வு காணும் வழிகளை ஆராய்ந்து, விலைவாசிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

Friday, August 14, 2009

விடுத‌லைத் திருநாள்

ஆகஸ்ட்,15 - 2009 இந்தியா அரசியல் ரீதியில் விடுதலை பெற்று 62 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன;ஆனால், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம்,குடிநீர் சாலைகள் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளின்மை, அறியாமை,இலஞ்சம், ஊழல், மத வெறி, ஜாதி வெறி, மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பிக்கும் அறிவீனம் போன்ற தளைகளிலிருந்து நாட்டு மக்களுக்கு இன்னமும் விடுதலை கிடைக்கவில்லை. பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. மகாத்மா காந்தி நடத்திய அஹிம்சா போராட்டத்தின் விளைவாக மட்டும் நாட்டிற்கு விடுதலை கிடைத்திடவில்லை; நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மாவீரன் பகத்சிங், வீர சாவர்க்கர், திலகர் போன்றோர் நடத்திய வீரம் செறிந்த போராட்டங்களும், ஆயிரக்கணக்கான மக்கள் சிந்திய இரத்தமும், தூக்குக் கயிற்றை முத்தமிட்ட நூற்றுக்கணக்கான மாவீரர்களின் தியாகமும் நாம் விடுதலை பெற கார‌ண‌மாக‌ அமைந்த‌ன‌.போராடிப் பெற்ற‌ விடுதலையைப் பேணிக்காக்க‌ வேண்டிய‌து ந‌ம் அனைவ‌ரின் க‌ட‌மையுமாகும்.சீன‌, பாகிஸ்தான் போன்ற‌ நாடுக‌ள் இந்தியாவை சீர்குலைக்க‌ ப‌ல்வேறு ச‌தி வேலைக‌ளில் ஈடுப‌ட்டு வ‌ருகின்ற‌ன்; இவ‌ர்க‌ள‌து இந்த சதி வேலைகளுக்கு, சித்தாந்தத்தையும் ம‌தத்தையும் காரணம் காட்டி ந‌ம‌து நாட்டிற்குள்ளேயே சில‌ தீய‌ ச‌க்திக‌ள் உத‌வி வ‌ருகின்ற‌ன. விழிப்புட‌ன் இருக்க‌ வேண்டிய‌து ஒவ்வொரு இந்திய‌னின் க‌ட‌மை. நாட்டில் நில‌வும் அவ‌ல‌ங்க‌ளுக்கு எதிராக‌வும் நாட்டிற்கெதிரான‌ தீய‌ ச‌க்திக‌ளை அழித்தொழிக்க‌வும் நம்மால் இயன்ற வழிகளில் நாம் தொட‌ர்ந்து போராடுவோம். பார‌த‌ நாடு பார்க்கெலாம் திலகம்; நாம‌த‌ன் புத‌ல்வ‌ர்; இந்நினைவ‌க‌ற்றோம்.
அனைவ‌ருக்கும் இனிய‌ விடுத‌லைத் திருநாள் நல்வாழ்த்துக்க‌ள்.

Wednesday, August 12, 2009

பன்றிக் காய்ச்சல்

உலகெங்கும் பன்றிக் காய்ச்சல் என்றழைக்கப்படும் influenza A h1n1 நோய்வெகு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்;சிலர் மரணமடைந்திருக்கின்றனர். இந்நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள, மற்றவர்களும் பாதிக்கப்படாமலிருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிற அதே வேளையில் தேவைய்ற்ற பீதியை தவிர்ப்பது மிகவும் அவசியம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுதியாக உள்ளவர்கள் இந்நோயின் தாக்குதலிலிருந்து தம்மை எளிதில் பாதுகாத்துக் கொள்ள முடியும்.சத்து மிகுந்த உணவு வகைகளை உண்பதன் மூலம் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை நாம் அதிகரித்துக் கொள்ள முடியும். இறைச்சி வகைகள், மீன், பால், உருளைக்கிழங்கு, பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் போன்றவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்; தினசரி உடற்பயிற்சி செய்வது நம்மை நோய்கள் அண்டாமல் தடுக்கும். கைகளை அடிக்கடி சோப்பை பயன்படுத்து சுத்தம் செய்வது, வெளியில் சென்று வ‌ந்த‌ பின் குளிப்ப‌து போன்ற‌வை இந்த‌ வைர‌ஸ் ந‌ம்மை தாக்காம‌ல் த‌டுக்கும். ம‌க்க‌ள் நெர்ச‌ல் மிகுந்த‌ இடங்க‌ளில் ப‌ய‌ண‌ம் செய்ய‌ நேரும்போது மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ளும் க‌வ‌ச‌ம் அணித‌ல் ந‌ல்ல‌து.அடிக்க‌டி த‌ண்ணீர் அருந்த வேண்டும்;ப‌ழ‌ச்சாறுக‌ள் அருந்த‌லாம்.ஆஸ்த்மா, இத‌ய‌ நோய், ச‌ர்க்க‌ரை நோய், சிறுநீர‌க‌ பாதிப்பு, நீண்ட‌ கால‌ நோய்வாய்ப்ப‌ட்ட‌வ‌ர்கள் மற்றும் க‌ருத்த‌ரித்த‌ பெண்க‌ள், வய‌து முதிர்ந்தோர், குழ‌ந்தைக‌ள் போன்றவர்களை இந்நோய் எளிதில் தாக்கும்; இந்நோயின் அறிகுறிக‌ளாக‌ 100 முத‌ல் 102 டிகிரி வ‌ரை ஜூர‌மிருக்கும்; தலை வ‌லி, உட‌ல் வ‌லி,வாந்தி இருக்கும்; மூக்கிலிருந்து நீர் ஒழுகும். நோயாளிக்கு மிக‌வும் க‌ளைப்பாக‌ இருக்கும். இத்த‌கைய‌ நிலையில் உள்ள‌வ‌ர்க‌ள் உட‌ன‌டியாக‌ த‌குந்த‌ ம‌ருத்துவ‌ரை அணுக‌ வேண்டும். முதலில் கூறிய‌து போல் இந்நோய் க‌ண்ட‌வ‌ர்க‌ள் த‌குந்த உடனடி சிகிச்சை மேற்கொள்ள முயல வேண்டுமே த‌விர‌ அச்ச‌மோ பீதியோ அடைய‌க் கூடாது; இந்நோய் க‌ண்டு குண‌ம‌டைந்த‌வ‌ர்க‌ள் ஆயிர‌க்க‌ணக்கானோர் உண்டு என்ப‌தை ம‌ற‌ந்து விட‌க்கூடாது.ப‌ன்றிக்காய்ச்ச‌ல் நோய் மிக‌ வேக‌மாக‌ ப‌ர‌வி வ‌ருகின்ற‌ இந்த‌ வேளையில், இக்கொடிய‌ நோயிலிருந்து ம‌க்க‌ளை காக்க மத்திய மாநில அரசுகள் விரைவான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை மேற்கொள்ள‌ வேண்டும்.பொதுவாக‌ இந்நோய் வெளி நாடு சென்று வ‌ந்தோர்க‌ளின் மூல‌ம் ப‌ர‌வுவ‌தால், வெளி நாடுக‌ளிலிருந்து இங்கே வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு விமான‌ நிலைய‌ங்க‌ளில் இந்நோய்த் த‌டுப்பு மாத்திரைக‌ளை வ‌ழ‌ங்க‌லாம்;அவ‌ர்க‌ள‌து இர‌த்த‌ மாதிரிக‌ளை சேக‌ரித்து சோத‌னைக்குட்ப‌டுத்த‌லாம். நோயை க‌ண்ட‌றியும் சோத‌னை முகாம்க‌ள் நாடு முழுக்க‌ நிறுவ‌ப்ப‌ட‌ வேண்டும்;நோயின் அறிகுறி உள்ள‌வ‌ர்க‌ளுக்கும், பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கும் தேவையான‌ ம‌ருந்துக‌ளும் மாத்திரைக‌ளும் த‌ட்டுப்பாடின்றி கிடைக்க‌ வ‌கை செய்த‌ல் வேண்டும்; நாடு முழுக்க‌ த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னை உட்ப‌ட‌ அனைத்து ம‌ருத்துவ‌ம‌னைக‌ளிலும் உடனடி ம‌ற்றும் த‌ர‌மான‌ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய‌ வேண்டும். ந‌ம‌து அர‌சு இய‌ந்திர‌ங்க‌ளில் வழக்கமாக காண‌ப்ப்ப‌டும் மெத்த‌ன‌ப் போக்கு ம‌ற்றும் ம‌னித‌ உயிர்க‌ளுக்கு ம‌திப்ப‌ளிக்காத‌ அல‌ட்சிய‌ப்போக்கு போன்ற‌வ‌ற்றை மூட்டை க‌ட்டி மூலையில் வைத்து விட்டு, இந்த‌ கொடிய‌ நோயை அழித்தொழித்து ம‌க்க‌ளை காக்கும் ப‌ணியில் சுறுசுறுப்புட‌னும், சேவை ம‌ன‌ப்பான்மையுட‌னும் செய‌ல்ப‌ட‌ வேண்டிய‌து இப்போதைய‌ உட‌ன‌டி தேவை. நாமும் ந‌ம்மால் இய‌ன்ற‌ வ‌ரை இந்நோய் ப‌ற்றி ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு ஊட்ட‌வும், அவ‌ர்க‌ளை இந்நோயிலிருந்து காக்க‌வும் முய‌ற்சிக‌ள் மேற்கொள்வோம்.

Tuesday, July 14, 2009

பெருந்தலைவர் காமராஜ்

நாட்டின் உய‌ர்ந்த தலைவர்; ஈடு இணையற்ற தலைவர்;குடும்ப நலனை விட மக்கள் நலனை பெரிதாக நினைத்தவர்; ஏழைகளுக்காகவே, அவர்களது நலனுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்த மாபெரும் தலைவர்; நாட்டின் விடுதலைக்காக சுமார் 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்; சுமார் 10 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்து,தமிழகத்தை பல வகையிலும் முன்னேற்றியவர்; இலஞ்சம் ஊழல் என்றால் என்னவென்றே தெரியாது ஆட்சி செய்தவர்; தனக்கென்றோ தனது குடும்பத்திற்கென்றோ ஒரு பைசா கூட சொத்து சேர்க்காதவர்; திருமணமே செய்து கொள்ளாமல், தனது வாழ்க்கையை நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தியாகம் செய்தவர்; பிர‌த‌ம‌ர் ப‌த‌வியே த‌ன்னை நாடி வந்த‌ போதும் கூட பதவியை நாடாது மக்கள் சேவையை நாடியவர்;இவர் போல் ஒரு தலைவர் இந்த நாட்டில் இனி தோன்ற மாட்டாரா என்று மக்கள் இன்றும் ஏங்குமளவுக்கு பெருமை கொண்டவர்; மாபெரும் தலைவர்; ஈடு இணையற்ற தலைவர்; சரித்திரம் காணாத, இனியும் காண முடியாத அப்பழுக்கற்ற தலைவர்; அவர் பிறந்த தமிழ் நாட்டில் நாமும் வாழ்கிறோம் என்பதே நமக்கு பெருமை; ஒரு நல்ல தலைவர்; திறமை வாய்ந்த தலைவர்; பெருமை மிக்க தலைவர்; சிறப்பு வாய்ந்த தலைவர்; உண்மையான தலைவர்; எளிமையான தலைவர் என்ற அனைத்தும் சேர்ந்த ஒரு வடிவம் காமராஜ். காமராஜர் ஒரு சரித்திரம்; ஒரு தியாக வரலாறு; பாரதத்தின் உண்மையான ரத்னா. ஜூலை 15. அவ‌ர‌து பிற‌ந்த‌ தின‌ம்; அவ‌ரை நாம் என்றும் ம‌ற‌வாதிருப்ப‌தே நாம் நாட்டுக்கு செய்யும் மிக‌ப் பெரும் தொண்டு.

Thursday, July 2, 2009

ஐ.மு.கூ. அரசு மக்களுக்கு தந்த பரிசு

ஐ.மு.கூ. அரசு தனக்கு பெருவாரியாக ஓட்டளித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு, 50 நாட்களுக்குள் பெட்ரோலியப் பொருள்களின் அபரிமிதமான விலை உயர்வு என்ற பரிசை வழங்கி திக்குமுக்காட வைத்திருக்கிறது. பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ 4 ம் , டீசலுக்கு லிட்டருக்கு ரூ 2 ம் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அத்யாவசியப் பொருள்களின் கடும் விலைவாசி உயர்வால் பெரும் அவதிப்பட்டு வரும் மக்கள் தலையில் இதன் மூலம் மேலும் விலைவாசி உயர்வு என்ற சுமை ஏறப்போகிறது. உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெயின் விலை ஏறியிருப்பதால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது என அரசு கூறுகிறது. உலக மார்க்கெட்டில் இப்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 70 டாலர் என்ற அளவில் இருக்கிறது. ஆனால், உலகில் கச்சா எண்ணெய் விலை 145 டாலர் என்ற அளவில் இருந்த போது இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை எந்த அளவு இருந்ததோ அந்த அளவுக்கு அதிக பட்சமாக விலையை உயர்த்தி மக்களை கசக்கி பிழிந்திருக்கிறது அரசு. 2008 டிசம்பர் முதல் 2009 ஜனவர் வரை அதாவது கச்சா எண்ணெய் விலை 145 டாலர் என்ற அளவில் இருந்த போது பெட்ரோல் விலை சென்னையில் ரூ 49.66. டில்லியில் ரூ 45.62, கொல்கத்தாவில் ரூ 47.16 மும்பையில் ரூ 49.08 ஆக இருந்தது. இதே கால கட்டத்தில் டீசல் விலை சென்னையில் ரூ 34.95, டில்லியில் ரூ 32.06, கொல்கத்தாவில் ரூ 33.92 மும்பையில் ரூ 36.39.ஆக இருந்தது. பிறகு கச்சா எண்ணெய் விலை உலக மர்க்கெட்டில் வெகுவாக சரிந்து பேரலுக்கு 45 டாலர் என்ற் அளவை எட்டியபோது அரசு 2009 ஜனவர் 29 ல், பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது. அப்போது பெட்ரோல் விலை சென்னையில் ரூ 44.24. டில்லியில் ரூ 40.62, கொல்கத்தாவில் ரூ 44.05 மும்பையில் ரூ 44.55 ஆக குறைந்தது. இதே கால கட்டத்தில் டீசல் விலை சென்னையில் ரூ 32.82, டில்லியில் ரூ 30.86, கொல்கத்தாவில் ரூ 33.21 மும்பையில் ரூ 34.45.ஆக குறைந்தது. இப்போதைய விலை ; பெட்ரோல் விலை சென்னையில் ரூ 48.58. டில்லியில் ரூ 44.63, கொல்கத்தாவில் ரூ 48.25 ; மும்பையில் ரூ 48.76ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது . டீசல் விலை சென்னையில் ரூ 34.98, டில்லியில் ரூ 32.87, கொல்கத்தாவில் ரூ 35.03 ; மும்பையில் ரூ 36.07 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது . விலை ஓரளவே அதிகரித்திருக்கும்போது அரசு மிகவும் அதிகபட்சமாக விலையை உயர்த்தியிருக்கிறது என்பது நிதர்சணமான உண்மை. பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருக்கிற வரிகளை குறைப்பதன் மூலம் இந்த விலை உயர்வை தவிர்த்திருக்க முடியும். தேர்தல் காலமென்றால் ஆட்சி போய்விடும் என்ற அச்சத்தால் அரசு விலையை உயர்த்த தயங்கும்; ஆனால் இது தேர்தல் காலமல்ல; எனவே சகட்டு மேனிக்கு விலையை உயர்த்தியிருக்கிறது.

Sunday, June 21, 2009

ஆழ்துளைக் கிணறுகள்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மூடப்படாமலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயதுச் சிறுமி அஞ்சனா மீட்புப் படையினரால் உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறாள்; அவளது பெற்றோர் கடவுளுக்கும், மீட்புப் படையினருக்கும் தங்கள் நன்றியை தெரிவிக்கட்டும்; நாமும் அந்தச் சிறுமி உயிரோடு மீட்கப்பட்டதற்காக நிம்மதி கொள்வோம். இதுபோன்ற சம்பவங்கள் நம் நாட்டில் அடிக்கடி நிகழ்கின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன். சிலவற்றில் கிணற்றில் விழுந்த குழந்தைகள் உயீரோடு மீட்கப்பட்டிருக்கின்றனர்; சிலவற்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றனர். கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் உத்தரப்பிரதேசத்திலுள்ள ஆக்ராவில் சோனா என்ற 2 வயதுச் சிறுமி இதே போல் மூடப்படாமலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பிணமாக மீட்கப்பட்டாள். சென்னையில் கூட இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தோண்டிய ஆழ்துளைக் கிணற்றை உறுதியான மரப்பலகைகள் , இரும்புத்தகடுகள் போன்றவற்றால் மூடி வைத்தால் இதுபோன்ற துயர சம்பவங்கள் நிகழாது; கிணற்றை சுற்றி தற்காலிக பாதுகாப்பு வேலி கூட அமைக்கலாம். ஆனால் இந்த சிறு காரியத்தை கூட கிணற்றின் உரிமையாளர்கள் மேற்கொள்வதில்லை; அலட்சிய மனப்பான்மையே இதற்கு காரணம். இதுபோன்ற சம்பவங்களுக்கு கிணற்றின் உரிமையாளர்கள் கொலைக் குற்றவாளிகளாக கருதப்பட்டு அவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்பட்டாலே இனி இதுபோல் நிகழாமல் பாதுகாக்கலாம்.

Monday, May 18, 2009

நன்றிக்கடன்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில்,காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ.மகத்தான வெற்று பெற்றிருக்கிறது. ஆனால், இந்த பெருவெற்றிக்கு காங்கிரஸ் தகுதியானதுதானா..? கடந்த 5 வருடங்களில் காங்கிரஸ் சாதித்தது என்ன..? கடுமையான விலைவாசி உயர்வு; தொழிற்சாலைகள் மூடல்; இலட்சக்கணக்கில் தொழிலாளர்கள் வேலையிழப்பு; வறுமையால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை; கோடி கோடியாய் ஊழல்கள்; ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டும் சுமார் 1 இலட்சம் கோடியளவுக்கு மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது; போபர்ஸ் ஊழலில் சோனியாவுக்கு நெருங்கியவரான குவத்ரோச்சியை கைதாகி விடாமல் பாதுகாக்கவும், அவர் ஊழலில் பெற்ற் கோடிக்கணக்கான ரூபாய் கமிஷன் தொகையை பத்திரமாக எடுத்துச் செல்லவும் உதவியது; மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யை சுயமாக செயல்பட விடாமல் செய்து, அதை காங்கிரஸ் கட்சியின் ஏஜெண்சி போல் மாற்றியது; நாடு முழுக்க பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரிப்பு; மத்திய அரசு பயங்கரவாதத்திற்கெதிராக மிக மிக மென்மையான போக்கை கடைப்பிடித்தது; பயங்கரவாதத்தால், ஆயிரக்கண்க்கில் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்படுவதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத காங்கிரஸ் அரசு, முகமது அப்சல், அக்மல் கசாப் போன்ற தேச விரோத பயங்கரவாதிகளின் உயிர்களை பாதுகாப்பதில் மட்டும் மிகவும் அதீத கவனம் செலுத்தி வருகிறது; பங்களதேஷிலிருந்து நாட்டிற்குள் ஊடுருவிய கோடிக்கணக்கானவர்களின் கண்டு கொள்ளாமல் அனுமதித்தது காங்கிரஸ் அரசு; நாட்டில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாதச் சம்பவங்களில் இப்படி சட்டவிரோதமக குடியேறியவர்களின் கை இருப்பது புலனாய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இப்படி தனது அரசியல் ஆதாயத்திற்காக நாட்டின் பாதுகாப்பையே அடகு வைத்த பெருமை காங்கிரஸ் அரசுக்குரியது; இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் காங்கிரஸ் அரசு கடைப்பிடித்த தவறான அணுகுமுறையின் விளைவாக ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; மத்திய காங்கிரஸ் அரசு சோனிய குடும்ப அரசாக செயல்பட்டு, இலங்கை அரசுக்கு ஆயுத உதவி உட்பட பல்வேறு உதவிகளை புரிந்ததன் விளைவாக இலங்கை அரசு தமிழினப் படுகொலயையே நிறைவேற்றி முடித்திருக்கிறது; இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக 75 இலட்சம் கோடி வரை கருப்புப் பணம் பிற நாடுகளுக்கு கடத்தப்பட்டு பதுக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் பல நாடுகள் இப்படி தங்கள் நாடுகளிலிருந்து கடத்தப்பட்ட கருப்பு பண்த்தை மீட்க பெருமுயற்சி எடுத்து வருகின்ற வேளையில் காங்கிரஸ் அரசு அதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாததோடு அது சாத்தியமற்றது என்று கூறி பெரும் கருப்புப் பண முதலைகளை காப்பாற்ற முயற்சிக்கிறது. இப்படி பலவற்றை வரிசையாக கூறிக் கொண்டே தொடரலாம். இவைகள் இந்த அளவு பெரு வெற்றிக்கு ஐ.மு.கூ சிறிதும் தகுதியற்றது என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், மக்கள் தீர்ப்பு அது தவறாயிருந்தாலும் கூட மதிக்கப்பட வேண்டியது அவசியம்; எனவே இனிவரும் காலங்களிலாவது தேச நலன் மக்கள் நலன் என்பதை மட்டும் அடிப்படையாய் கொண்டு செயல்பட்டு இந்தியாவை உலக அரங்கில் முதலிடத்திற்கு கொண்டு செல்வதை இலக்காக கொண்டு பணியாற்றுவதே வாக்களித்த மக்களுக்கு காங்கிரஸ் செய்யும் நன்றிக்கடனாயிருக்கும்

Sunday, May 10, 2009

அச்சம் தரும் நினைவுகள்

இந்தியப் பாராளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முகமது அப்சல் என்பவனுக்கு, காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசு கடந்த 5 வருடங்களாக தூக்கு தண்டனையை நிறைவேற்றாமல், அவனை பாதுகாத்து வருகிறது. சிறுபான்மையினர்களின் ஓட்டுக்காக அப்சலை தூக்கிலிடாமல் காலம் தள்ளி வருகிறது. தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக பயங்கரவாதிகளை கூட தண்டிக்க ம்றுக்கும், அதிலும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பயங்கரவாதிக்கு கூட தண்டனையை நிறைவேற்றாமலிருக்கிற காங்கிரஸ் அரசின் இது போன்ற செயல்பாடுகள்தான் நாட்டில் பயங்கரவாதம் அதிகரிக்க முக்கிய காரணமாயிருக்கின்றது. இந்த விஷயத்தில் ராகுல் காந்தி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். நாட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் வரிசைப்படி பார்த்தால் அப்சல் 22 வது இடத்தில் இருக்கிறான். அப்சலுக்கு முன் இருக்கிற 21 பேரும் தூக்கிலிடப்பட்ட பின் அப்சல் தூக்கிலிடப்படுவான் என்று கூறியிருக்கிறார். தனிப்பட்ட காரணங்களுக்காகவும், உணர்ச்சி வசப்பட்டும் கொலை போன்ற காரியங்களில் ஈடுபட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பவர்களை அப்சலோடு ஒப்பிடுகிறார் ராகுல். இது ஒரு பொறுப்பற்ற பேச்சு மட்டுமல்லாது நியாயமற்றதும் கூட. நமது நாட்டை சீர்குலைக்க திட்டமிட்டு, பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுத்தவன் அப்சல்; நமது பாதுகாப்பு படை வீரர்கள் மட்டும் தங்கள் இன்னுயிரை ஈந்து அந்த தாக்குதலை முறியடித்திருக்காவிட்டால் நூற்றுக்கணக்கான எம்.பி.க்கள் உட்பட பலர் உயிரிழந்திருப்பதோடு நாடே பயங்கரவாதிகளின் கைகளில் பணயக் கைதியாக மாற நேர்ந்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு கொடூர பயங்கரவாதியை சாதாரண கொலைக்குற்றவாளியோடு ஒப்பிடுகிறார் ராகுல் என்றால் இது எத்தகைய மடத்தனமானது..? இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் நமது நாட்டுக்கு கிடைத்த சாபம். இப்படிப்பட்டவர்களால்தான் பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்து அப்பாவிகள் ஆயிரமாயிரமாய் தங்கள் இன்னுயிர்களை இழக்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்டவர்களை மக்கள் ஒட்டுமொத்தமாய் நிராகரிக்க வேண்டும். சமீபத்தில் மும்பை மீது தாக்குதல் தொடுத்து நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவித்த பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் உயிரோடு பிடிபட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறான். அவனுக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிப்பது உறுதி. ராகுல் கூற்றுப்படி பார்த்தால் தூக்கு தண்டனை குற்றவாளிகள் பட்டியலில் கசாப் 23 வது இடத்திலிருப்பார்; எனவே கசாப்புக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது என்பதுதானே ராகுல் தரும் செய்தி. எனவே ஒன்று மட்டும் நிச்சயம்; காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்து விட்டால், எந்த பயங்கரவாதிக்கும் அவன் முஸ்லிமாக இருந்து விட்டால் தண்டனை கிடையாது என்பது உறுதியாகி விட்டது.இன்னொன்றும் நிச்சயம்; காங்கிரஸ் மத்தியில் ஆட்சிப் பொறுப்பிலிருந்தால், நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகர்க்கவே செய்யும்; காங்கிரசின் ஓட்டு வங்கி அரசியலுக்காக ஆயிரமாயிரமாய் மக்கள் பயங்கரவாதத்திற்கு தங்கள் இன்னுயிர்களை பலிகொடுக்க வேண்டியிருக்கும். பயங்கரவாதிகளால் ஆயிரமாயிரமாய் மக்கள் கொல்ல‌ப்ப‌ட‌லாம்; ஆனால் ஒரு ப‌ய‌ங்க‌ர‌வாதி த‌ண்டிக்க‌ப்ப‌ட்டுவிடக் கூடாது என்ப‌துதான் காங்கிர‌சின் கொள்கை . ராகுலின் பேச்சு இதைத்தான் எடுத்துக்காட்டுகிற‌து. அர‌சிய‌லில் இப்போதுதான் காலெடுத்து வைத்திருக்கின்ற் நில‌யில், ராகுலின் எண்ணங்கள் இப்படிப்பட்ட நிலையில் இருப்பதை பார்க்கும்போது இவரெல்லாம் பிரதமராகி விட்டால், நாடு என்ன ஆகும்..? மக்கள் என்ன கதிக்கு ஆளாவார்கள்..? நினைத்துப்பார்க்கவே அச்சமாயிருக்கிறது.

Sunday, April 26, 2009

இந்தியா அடிமைகளின் தேசமல்ல

சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வதேரா தேர்தல் கூட்டத்தில் பேசும் போது, எனது தம்பி ராகுல் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்தான் என்று குறிப்பிட்டிருக்கிறார். சோனியா காந்தி பேசும்போது, ராகுல் இப்போது பிரதமராக மாட்டார்; வருங்காலத்தில் பிரதமராவார் என்று கூறியிருக்கிறார்.
ராகுல் காந்தியோ எனக்கு இன்னும் போதுமான அனுபவம் கிடைக்கவில்லை; எனவே இப்போது பிரதமராக மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
இந்தக் குடும்பம் ஏதோ மன்னர் குடும்பம் போலவும் இந்தியா ஏதோ அவர்கள் குடும்பத்திற்கு சொந்தமான நாடு என்பது போலவும் இவர்களது பேச்சுக்கள் அமைந்திருக்கின்றன. இவர்களது இத்தகைய ஆணவப் பேச்சுக்களுக்கும், ஆணவ மனப்பான்மைக்கும் இந்தியர்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். காங்கிரஸ்காரர்கள் இந்தக் குடும்பத்திற்கு காலம் காலமாக கொத்தடிமைகளாக இருந்து கொண்டிருப்பாதால்தான் இவர்களிடமிருந்து இத்தகைய பேச்சுக்கள் வெளிப்படுகின்றன. ஆனால் ஒரு விஷயம் தெளிவானது; காங்கிரஸ்காரர்கள்தான் சோனியா குடும்பத்தின் கொத்தடிமைகளே தவிர மக்கள் அல்ல; இந்தியா மிகப்பெரும் தேசம்; ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த நாட்டை ஆளும் தகுதியுண்டு. 2001 ல் காங்கிரசிலிருந்த முதுகெலும்புள்ள ஆண்மகனான நரசிம்மராவ் பிரதமராயிருந்தபோதே இந்தக் குடும்பத்தின் ஆதிக்கத்திற்கு மக்கள் முடிவு கட்டிவிட்டார்கள். சுயமரியாதை அற்ற, தன்மானமிழந்த சில காங்கிரஸ்காரர்கள் இன்னும் இந்தக் குடும்பத்தின் கொத்தடிமைகளாகவே இருந்து கொண்டிருப்பதால், சோனிய குடும்பத்தினர் நாட்டின் பிரதமர் பதவி தங்கள் குடும்பச் சொத்து என்று கனவெல்லாம் கண்டு கொண்டிருக்கக் கூடாது. அது என்றுமே கனவாகத்தான் இருக்கும்.

Sunday, April 12, 2009

பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர்

பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார்.டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர்.பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே சமயம், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார்.சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6-ல் காலமானார். இந்தியாவின் மாபெரும் த‌லைவ‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ டாக்ட‌ர் அம்பேத்க‌ர் அவ‌ர்க‌ளின் பிற‌ந்த‌ நாளில் அவ‌ரை பெருமையுட‌ன் நினைவுகூர்வோம்.

Tuesday, April 7, 2009

ஏப்ரல் 14. தமிழ்ப் புத்தாண்டு தினம்

இலங்கை இராணுவத்தின் குண்டுவீச்சில் சிக்கி இலங்கைத் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் இலட்சக்கணக்கான அப்பாவித் த‌மிழர்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டு வருகிறது.அவர்கள் தங்கள் சொந்த வீடு நிலங்களை துறந்து, காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிவ‌தோடு,பல்வேறு நாடுகளில் அகதிகளாகவும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை காப்பாற்றவும், அவர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை பெற்றுத்தர வேண்டிய இந்திய அரசு தனது கடமையிலிருந்து தவறியிருப்பதோடு, இலங்கை அரசுக்கு மறைமுக உதவிகளையும் செய்து வருகிறது. இந்த தமிழ் புத்தாண்டு தினத்தில், சகோதர இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவை தெரிவிக்க உறுதி கொள்வோம்..

Monday, March 30, 2009

வாக்களிக்க பணம் கொடுத்தால் பெற்றுக் கொள்ளுங்கள்.

மிகப் பெரும் தேர்தல் திருவிழாவை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது; நாம் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் 110 கோடி மக்களின் நன்மை தீமைகளை,உயர்வு தாழ்வுகளை நிர்ணயிக்கப் போகின்றது.தேர்தல் நாளன்று தவறாது வாக்களிப்போம்.தேர்தலில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டி பணம் அளிக்கப்படலாம்; விலையுயர்ந்த பொருட்கள் கூட பரிசாக அளிக்கப்படலாம். சமீபத்தில் நடந்த திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் நடந்த உப தேர்தலின் போது ஆளும் கட்சிக்கு சாதகமாக வாக்களிப்பதற்காக ஒவ்வொரு வாக்களருக்கும் தலைக்கு ரூ 5000 மற்றும் அதற்கு மேலும் அளிக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. ந‌டக்கவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலின் போதும் அதேபோல பணம் வாரி வழங்கப்படலாம். சாதனைகளை விட பண பலமும் படை பலமுமே இப்போதெல்லம் தேர்தலில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்குவது சரியா..? முற்றிலும் தவறு என்பதே இதற்கு பதில் என்பதை அனைவரும் அறிவார்கள்; குறிப்பிட்ட கட்சிக்கு அல்லது வேட்பாளருக்கு வாக்களிக்கக் கோரி பணம் அல்லது விலையுயர்ந்த பொருட்கள் அளிக்கப்பட்டால், அதை வாங்காமல் நிராகரிப்பது மிகவும் உயர்ந்த கொள்கை; அப்படிச் செய்பவர்கள் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.ஆனால், வேறோரு விஷயமும் இங்கு மனதில் கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. வாக்களர்களுக்கு பணம் அளிப்பவர்கள் யாரும் தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை அளிப்பதில்லை. லஞ்சம்,ஊழல், கமிஷன் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் வரிப்பணத்தின் ஒரு பகுதியைத்தான் இப்படி தேர்தலின் போது மக்களுக்கு இலஞ்சமாக அளிக்கிறார்கள்; சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிக்கும் கதையாக இப்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறுபவர்கள் அதற்குப் பிறகு தான் செலவழித்ததை விட பலமடங்கு பணத்தை மக்கள் வரிப்பணத்திலிருந்து கொள்ளையடிக்கவும் செய்கிறார்கள்.எனவே தேர்தலின் போது அரசியல்வாதிகள் மக்களுக்கு அளிக்கும் பண்ம் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணமே. எனவே,தேர்தலின் போது தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க அரசியல் கட்சிகள் பணம் அளித்தால் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள்; ஆனால் பணம் பெற்றுக் கொண்டோம் என்பதற்காக அவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டியதில்லை. மக்களிடமிருந்து கொள்லையடித்த பணத்தில் ஒரு சிறு பகுதியைத்தான் மக்களுக்கு அளிக்கிறார்கள். அதற்காக நன்றிக் கடன்பட்டு அவர்களுக்கு சாதகமாக வாக்களிக்க வேண்டிய எந்த அவசியமுமில்ல. மொத்த‌த்தில் இதுதான் விஷ‌ய‌ம். வாக்க‌ளிக்க‌ ப‌ண‌ம் கொடுத்தால் பெற்றுக் கொள்ளுங்க‌ள்; ஏனெனில், அது ம‌க்க‌ளின் ப‌ண‌ம்தான். ஆனால், ந‌ன்றிக் க‌ட‌ன்ப‌ட்டு அவ‌ர்க்ளுக்கே வாக்க‌ளிக்காதீர்க‌ள்; ந‌ன்றாக‌ யோசித்து யாருக்கு வாக்க‌ளிக்க‌ வேண்டுமோ அவ‌ர்க‌ளுக்கு வாக்க‌ளியுங்க‌ள். யார் ல‌ஞ்ச‌ம் வாங்க‌ மாட்டார்க‌ளோ.... யார் ஊழ‌ல் செய்ய‌ மாட்டார்களோ...யார் க‌மிஷ‌ன் வாங்க‌ மாட்டார்க‌ளோ...யார் த‌ன‌து குடும்ப‌த்தின் வ‌ள‌ர்ச்சிக்காக மட்டும் உழைக்காமல் மக்க‌ளுக்காக‌ பாடுபடுவார்க‌ளோ..யார் இலவசங்களை மட்டும் கொடுத்து மக்களை ஏமாற்றாமால் ம‌க்க‌ளின் வாழ்க்கைத் த‌ர‌ உய‌ர்வுக்காக‌ ந‌ல்ல‌ ந‌ல்ல‌ திட்ட‌ங்க‌ளை நிறைவேற்றுவ‌ர்க‌ளோ..யார் ம‌க்க‌ளை த‌ங்க‌ள் அழ‌குப் பேச்சால் ஏமாற்றாம‌ல் உண்மையிலேயே ம‌க்க‌ளுக்காக உழைப்பார்களோ..யார் தேச‌ ந‌ல‌ன் ம‌ற்றும் தேச‌த்தின் பாதுகாப்பிற்காக‌ உறுதியுட‌ன் போராடுவார்க‌ளோ...அவர்களுக்கு வாக்களியுங்கள்.

Thursday, March 26, 2009

இது ஒரு அவமானம்

ஐ.பி.எல் 20/20 கிரிக்கெட் போட்டிகளை தென்னாப்பிரிக்காவில் நடத்துவது என்று கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருக்கிறது. இம்முடிவு வெறும் பணத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு வாரியம் செயல்படுவதை எடுத்துக் காட்டுகிறது. நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடைபெறுகிற காலகட்டத்தில் போட்டிகளை ஏற்பாடு செய்து விட்டு பின்பு அரசிடமிருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான உத்தரவாதம் கிடைக்கவில்லை என்று கூறி போட்டிகளை வெளி நாட்டில் நடத்த ஏற்பாடு செய்திருப்பது நாட்டுக்கு அவமானகரமான விஷயம். தேர்தல் முடிந்த பிறகு நடத்தும் வகையில் போட்டிகளை வாரியம் தள்ளி வைத்திருக்க வேண்டும்.மத்திய அரசும் இவ்விசயத்தில் சொதப்பியிருக்கிறது.போட்டிகளை வெளி நாட்டில் நடத்த அனுமதியளித்திருக்கக் கூடாது. கோடிகளை விட நாட்டின் கௌரவம் முக்கியம் என்பதை வாரியம் உணர்ந்து கொள்ள வேண்டும்; அரசு அதை வாரியத்திற்கு உணர்த்தியிருக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் வாரியமே இந்தியாவில் பாதுகாப்பில்லை என்று கூறி வெளிநாட்டில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தினால் மற்ற நாட்டு கிரிக்கெட் குழுக்கள் எப்படி இந்தியாவில் கிரிக்கெட் விளையாட வரும்..? நடைபெறவிருக்கின்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள மற்ற நாட்டு விளையாட்டு வீரர்கள் எப்படி இந்தியா வர துணிவு கொள்வார்கள்..? உலக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவிருக்கின்ற இக்கால கட்டத்தில் இதுபோன்றதொரு நிலை உருவாக்கப்ப‌ட்டிருப்பது வருந்தத்தக்கது.இந்தியா ஒரு பாதுகாப்பற்ற தேசம் என்ற ஒரு செய்தியை இந்திய கிரிக்கெட் வாரியமே உலகுக்கு அறிவித்திருப்பதும் அதை இந்திய அரசும் மௌனமாய் அனுமதித்திருப்பதும் நாட்டை கேவலப்படுத்துகிறது.