
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று. இம்மாநிலத்தில் இஸ்லாமியர்கள் ஓரளவு அதிகமாயிருக்கிற ஒரே காரணத்தை அடிப்படையாக வைத்து பாகிஸ்தான் இம்மாநிலத்தை பிரச்னைக்குரிய பகுதியாக சித்தரித்து, இதை இந்தியாவிலிருந்து துண்டாட பல்வேறு சதிவேலைகளில் ஈடுபட்டு வருகின்றது. கடந்த பல வருடங்களாக பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு தன் நாட்டில் செயல்படும் பயிற்சி முகாம்களில் ஆயுதப் பயிற்சி அளித்து அவர்களை காஷ்மீருக்குள் ஊடூருவ வைத்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட வைக்கிறது. சமீப காலமாக சீனா போன்ற நாடுகளும் காஷ்மீரை துண்டாட பல்வேறு காரியங்களில் ஈடுபட்டு வருகின்றன. சீனா காஷ்மீர் பகுதியிலிருந்து தன் நாட்டிற்குள் பயணம் செய்பவர்களுக்கு தனி விசா வழங்குகிறது; இதுமட்டுமின்றி, லிபிய அதிபர் கடாபி ஐ.நா. பொதுப் பேரவை கூட்டத்தில், காஷ்மீர் தனி நாடாக வேண்டும் என்று உரையாற்றியிருக்கிறார்; இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு காஷ்மீருக்கென்று தனி தூதரை அறிவித்திருக்கிறது. மத்திய ஐ.மு.கூ. அரசின் தவறான மற்றும் பலவீனமான கொள்கைகளும் செயல்பாடுகளுமே இந்நிலைக்கு பிரதான காரணம் என்று கூறினால் அதில் பெரும் தவறேதுமிருக்க முடியாது. பிற மாநிலங்களைப் போலவே காஷ்மீரும் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த பகுதியாகும். இது சம்பந்தமாக எவ்வித பேச்சுவார்த்தையும் எவ்ருடனும் கிடையாது என்ற உறுதியான நிலைப்பாடு வேண்டும்; மேலும், பாகிஸ்தானால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கும் காஷ்மீர் பகுதியும் இந்தியாவுக்குரியதாகும்; அதை மீட்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். காஷ்மீர் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிற பயங்கரவாத அமைப்புகளை கடுமையான இராணுவ நடவடிக்கைகளின் மூலம் நிர்மூலமாக்குவதோடு, பிரிவினைக்கு ஆதரவான மக்கள் ஜனநாயக கட்சி, அனைத்துக் கட்சி ஹூரியத் மாநாடு, ஜெ.கெ.எல்.எப். போன்ற அமைப்புகள் மீதும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கிற அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவை சிறிது சிறிதாக நீர்த்துப் போக வைத்து ஓரிரு வருடங்களில் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். இதுபோன்ற உறுதியான நடவடிக்கைகளினாலேயே ஜம்மு காஷ்மீரை பாதுகாக்க முடியும். தேசத்தின் எல்லைகளை பாதுகாப்பதிலும், ஒருமைப்பாட்டை நிலை நிறுத்துவதிலும் எவ்வித சமரசத்திற்கும் இடமற்ற கடுமையான அணுகுமுறை வேண்டும். இதன் மூலமே நமது எதிரிகளை நாம் புறம் தள்ளி நமது நாட்டை வல்லரசாக்க முடியும்.
No comments:
Post a Comment