Tuesday, September 8, 2009

சீனாவின் அராஜகம்

காஷ்மீரிலுள்ள லடாக் பகுதியில், சீனா தொடர்ந்து அத்து மீறல்களில் ஈடுபட்டு வருகிறது; இந்தியாவின் வான்வெளிக்குள் சீனா ஹெலிகாப்டர்கள் ஊடுருவியிருப்பதோடு இந்திய நிலப் பகுதிக்குள்ளும் 1 1/2 கிலோ மீட்டர் தூரம் வரை சீனப்படைகள் நுழைந்து தங்களது கொடியை வரைந்து வைத்து விட்டு சென்றிருக்கின்றன. இதற்கு முன்பு அருணாச்சலப் பிரதேசப் பகுதிக‌ளிலும் சீனா இதுபோன்ற அத்து மீறல்களில் ஈடுபட்டிருக்கிறது. சீனா கடைப்பிடிக்கிற மிரட்டல் தந்திரம் இது. இந்தியா இதற்கு தகுந்த பதிலடி கொடுப்பது அவசியம்.சீன தூதரை வரவழைத்து கடும் கன்டனம் தெரிவிப்பதோடு, இனியும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால், பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று உறுதியாக எச்சரிக்க வேண்டும். ஆனால் இந்திய ஐ.மு.கூ.அரசு இந்த விஷயத்தில் மழுப்பலான நிலையையே கடைப்பிடிக்கிறது. இதை பூசி மெழுக முயற்சிப்பது போலவே தெரிகிறது. வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இது ஒரு பெரிய விஷயமல்ல என்பது போல் பேசியிருக்கிறார். இந்த விஷயத்தை இப்படிப்பட்ட ரீதியில் அணுகும்போது சீனா தைரியம் பெற்று மேலும் மேலும் ஊடுருவல்களை நடத்தத் துவங்கும். எனவே எல்லையில் நிகழும் அத்து மீறல்களுக்கு எதிராக அரசு கடும் நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் எல்லைக்குள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்தாலும், பாகிஸ்தானே வாலாட்டினாலும், சீனா ஆக்ரமிப்பு செய்ய முயற்சித்தாலும் கடுமையான பதிலடி கிடைக்கும் என்பதை தனது செயல்பாடுகளில் ஐ.மு.கூ. அரசு காட்ட வேண்டும். இவைகள் ஒரு புறமிருக்க, உலகின் எங்கெங்கோ நடக்கிற சம்பவங்களுக்கு எதிராக,இந்தியாவில் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிற கம்யூனிஸ்ட்கள் இந்தியாவுக்கு எதிரான் சீனாவின் ஆக்ரமிப்பு முயற்சிகளுக்கு எதிராக வாயை மூடிக் கொண்டு மௌனம் காக்கிறார்களே ஏன்..? கம்யூனிஸ்ட்களுக்கு தாய் நாடு சீனாவா.. இந்தியாவா..? 1962ல் இந்தியா மீது சீனா ஆக்ரமிப்பு செய்த போது, சீனாவின் ஆக்ரமிப்பு சரியென்ற் நிலை எடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்கள். அவர்களது சீன விசுவாசம் இன்னும் போகவில்லை என்பது கவலைக்குரிய விஷயம். ஆனால், இந்திய மக்கள் தேசத்திற்கு ஆபத்து எனும்போது, தங்கள் வேறுபாடுகளையும் பிரச்னைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, ஓரணியாய்த் திரண்டு, தேச விரோதிகளையும், தேசத் துரோகிகளையும் முறியடிப்பார்கள் என்பது உறுதியான விஷயம்.

No comments:

Post a Comment