Thursday, August 20, 2009

விலைவாசி உயர்வு.

அத்யாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் மிகவும் அதிகரித்து வருகிறது. நாட்டின் உச்ச நீதிமன்றமே இப்பிரச்னையில் தலையிடுமளவுக்கு இது புதிய பரிமாணத்தை அடைந்திருக்கிறது. சென்ற வருடத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9% என்ற அளவை எட்டியிருந்த போது, இத்தகைய வளர்ச்சியோடு இணைந்து விலைவாசிகளும் உயரத்தான் செய்யும் என்று அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பொருளாதார விற்பன்னர்களும் வியாக்கியானம் அளித்திருந்தனர். இப்போது பொருளாதார வளர்ச்சி மந்தமான நிலையில் இருக்கிறது; பணவீக்கமும் மைனஸில் இருக்கிறது. ஆனால் இப்போதும் விலைவாசிகள் மட்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டுதானிருக்கின்றன.உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் விலை பெரிதாக உயர்ந்து விடாத நிலையிலேயே மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் டீச‌ல் மீது அப‌ரிமித‌மான‌ விலையுய‌ர்வை அறிவித்த‌து.இது ஏற்க‌ன‌வே உய‌ர்ந்து கொண்டிருந்த‌ விலைவாசிக்கு மேலும் ஒரு தூண்டுகோலாய் அமைந்த‌து. ம‌க்க‌ளின் வாங்கும் ச‌க்தி குறைவாயிருக்கிற‌ இக்கால‌ க‌ட்ட‌த்தில் விலைவாசிக‌ள் இப்ப‌டி இற‌க்கை க‌ட்டி ப‌ற‌ந்து கொண்டிருப்ப‌து அனைத்து ம‌க்க‌ளின் வாழ்க்கைத் த‌ர‌த்தையும் பெரிதும் பாதித்திருக்கிற‌து.த‌மிழ‌க‌ அர‌சு ரேஷ‌ன் க‌டைக‌ளில் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வ‌ழ‌ங்குவ‌தோடு விலைவாசிக‌ளை க‌ட்டுப்ப‌டுத்தும் ந‌ட‌வ‌டிக்கைக‌ள் முடிந்து விட்ட‌து என்று நினைத்துக் கொள்கிற‌து; வெளி ம‌ர்க்கெட்டில் ம‌ற்ற‌ பொருள்க‌ளின் விலைக‌ள் எவ்வ‌ள‌வு உய‌ர்ந்தாலும் அல‌ட்டிக் கொள்ளாம‌ல் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வ‌ழ‌ங்கிய‌ அர‌சு என்று உர‌க்க‌ முழ‌ங்கி ஏதோ த‌மிழ் நாட்டில் விலைவாசி உய‌ர்வு என்ற‌ துன்ப‌மே ம‌க்க‌ளை பாதிக்க‌வில்லை என்ப‌து போல‌ ஒரு மாயையை உருவாக்கி வ‌ருகிற‌து. 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வ‌ழ‌ங்குத‌ல் என்ப‌து ந‌ல்ல‌ திட்ட‌மே. ஆனால், இத்திட்ட‌த்தின் மூல‌ம் பெரும்பாலான‌ இட‌ங்க‌ளில் தரம் குறைந்த அரிசியே வ‌ழ‌ங்க‌ப்படுவதால் மக்கள் இதை உணவிற்காக பயன்படுத்துவது மிகவும் குறைவாகவேயிருக்கிறது. மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 1 கிலோ அரிசி ரூ 3.50 ஆக இருந்தது; இப்போது ரூ 1 ஆகியிருக்கிறது. இதன் மூலம் மக்களுக்கு 1 மாதத்தில் மீதமாகும் தொகை 2.50*20 வெறும் 50 மட்டுமே; ஆனல், மற்ற பொருள்களின் அதிகபட்ச விலை உயர்வால் ஏற்படும் பொருளாதரப் பிரச்னையில் சிக்கி இந்த 50 ரூபாய் இலாபம் என்பது காணாமல் போய்விடுகிறது.தென்மேற்கு பருவ மழை இந்த வருடம் வழக்கத்தை விட குறைவாக பெய்திருக்கிறது; வட மாநிலங்களும் குறைவான மழைப் பொழிவையே பெற்றிருக்கின்றன; இதனால் உணவுப் பொருள்களின் உற்பத்தி குறையக் கூடும். விலைவாசிகள் மேலும் உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர். எனவே மத்திய மாநில அரசுகள் விலைவாசிகளை கட்டுப்படுத்துவதில் உடனடி தீவிர நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். வெறும் அறிக்கைகளும் உறுதிமொழிகளும் எந்த பயனையும் தந்து விடப்போவதில்லை. பயன்தரத்தக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையே மக்கள் விரும்புகிறார்கள். கடந்த ஆட்சியிலும் கூட விலைவாசிகள் உயரத்தான் செய்தன என்று புள்ளி விவரங்களை அடுக்கி மக்களை ஏமாற்றாமல் பிரச்னையின் தீவிரத்தன்மையை உணர்ந்து, அதற்கு தீர்வு காணும் வழிகளை ஆராய்ந்து, விலைவாசிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment