
உலகெங்கும் பன்றிக் காய்ச்சல் என்றழைக்கப்படும் influenza A h1n1 நோய்வெகு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்;சிலர் மரணமடைந்திருக்கின்றனர். இந்நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள, மற்றவர்களும் பாதிக்கப்படாமலிருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிற அதே வேளையில் தேவைய்ற்ற பீதியை தவிர்ப்பது மிகவும் அவசியம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுதியாக உள்ளவர்கள் இந்நோயின் தாக்குதலிலிருந்து தம்மை எளிதில் பாதுகாத்துக் கொள்ள முடியும்.சத்து மிகுந்த உணவு வகைகளை உண்பதன் மூலம் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை நாம் அதிகரித்துக் கொள்ள முடியும். இறைச்சி வகைகள், மீன், பால், உருளைக்கிழங்கு, பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் போன்றவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்; தினசரி உடற்பயிற்சி செய்வது நம்மை நோய்கள் அண்டாமல் தடுக்கும். கைகளை அடிக்கடி சோப்பை பயன்படுத்து சுத்தம் செய்வது, வெளியில் சென்று வந்த பின் குளிப்பது போன்றவை இந்த வைரஸ் நம்மை தாக்காமல் தடுக்கும். மக்கள் நெர்சல் மிகுந்த இடங்களில் பயணம் செய்ய நேரும்போது மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ளும் கவசம் அணிதல் நல்லது.அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும்;பழச்சாறுகள் அருந்தலாம்.ஆஸ்த்மா, இதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு, நீண்ட கால நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் கருத்தரித்த பெண்கள், வயது முதிர்ந்தோர், குழந்தைகள் போன்றவர்களை இந்நோய் எளிதில் தாக்கும்; இந்நோயின் அறிகுறிகளாக 100 முதல் 102 டிகிரி வரை ஜூரமிருக்கும்; தலை வலி, உடல் வலி,வாந்தி இருக்கும்; மூக்கிலிருந்து நீர் ஒழுகும். நோயாளிக்கு மிகவும் களைப்பாக இருக்கும். இத்தகைய நிலையில் உள்ளவர்கள் உடனடியாக தகுந்த மருத்துவரை அணுக வேண்டும். முதலில் கூறியது போல் இந்நோய் கண்டவர்கள் தகுந்த உடனடி சிகிச்சை மேற்கொள்ள முயல வேண்டுமே தவிர அச்சமோ பீதியோ அடையக் கூடாது; இந்நோய் கண்டு குணமடைந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் உண்டு என்பதை மறந்து விடக்கூடாது.பன்றிக்காய்ச்சல் நோய் மிக வேகமாக பரவி வருகின்ற இந்த வேளையில், இக்கொடிய நோயிலிருந்து மக்களை காக்க மத்திய மாநில அரசுகள் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.பொதுவாக இந்நோய் வெளி நாடு சென்று வந்தோர்களின் மூலம் பரவுவதால், வெளி நாடுகளிலிருந்து இங்கே வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இந்நோய்த் தடுப்பு மாத்திரைகளை வழங்கலாம்;அவர்களது இரத்த மாதிரிகளை சேகரித்து சோதனைக்குட்படுத்தலாம். நோயை கண்டறியும் சோதனை முகாம்கள் நாடு முழுக்க நிறுவப்பட வேண்டும்;நோயின் அறிகுறி உள்ளவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேவையான மருந்துகளும் மாத்திரைகளும் தட்டுப்பாடின்றி கிடைக்க வகை செய்தல் வேண்டும்; நாடு முழுக்க தனியார் மருத்துவமனை உட்பட அனைத்து மருத்துவமனைகளிலும் உடனடி மற்றும் தரமான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நமது அரசு இயந்திரங்களில் வழக்கமாக காணப்ப்படும் மெத்தனப் போக்கு மற்றும் மனித உயிர்களுக்கு மதிப்பளிக்காத அலட்சியப்போக்கு போன்றவற்றை மூட்டை கட்டி மூலையில் வைத்து விட்டு, இந்த கொடிய நோயை அழித்தொழித்து மக்களை காக்கும் பணியில் சுறுசுறுப்புடனும், சேவை மனப்பான்மையுடனும் செயல்பட வேண்டியது இப்போதைய உடனடி தேவை. நாமும் நம்மால் இயன்ற வரை இந்நோய் பற்றி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவும், அவர்களை இந்நோயிலிருந்து காக்கவும் முயற்சிகள் மேற்கொள்வோம்.
No comments:
Post a Comment