Monday, December 7, 2009
தவறான சிந்தனைகள் ; விபரீதமான முடிவுகள்.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா காஷ்மீர் பிரச்னை சம்பந்தமாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவினைவாத அமைப்புகள் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று கூறியிருக்கிறார். காஷ்மீர் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று; ஆனால் காஷ்மீர் சம்பந்தமாக அந்த மாநிலத்து முதலமைச்சரே அண்டை நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுவது விபரீதமாயிருக்கிறது. ஓமர் அப்துல்லாவின் இந்தக் கூற்றை மத்திய அரசு கண்டிக்காமலிருப்பது அதை விட விபரீதமாயிருக்கிறது. ஓமர் அப்துல்லா காங்கிரசின் கூட்டணியோடுதான் ஆட்சியிலிருக்கிறார் என்பதும இங்கு நினைவில் கொள்ளப்பட வேண்டும். பிற மாநிலங்களைப் போலவே ஜம்மு காஷ்மீரும் இந்தியவின் ஒரு அங்கம்; இது சம்பந்தமாக பாகிஸ்தானுடனோ அல்லது எவருடனோ எவ்வித பேச்சுவார்த்தையும் கிடையாது; பேச்சுவார்த்தை என்பது பாகிஸ்தானால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கும் ஆக்ரமிப்பு காஷ்மீர் சம்பந்தமாக மட்டுமே நடைபெற முடியும் என்ற உறுதியான நிலைப்பாடு வேண்டும். ஆனால், மத்திய அரசே, ஜம்மு காஷ்மீர் ஒரு பிரச்னைக்குரிய பகுதி என்ற கருத்துடனிருப்பதால்தான் ஒமர் அப்துல்லா போன்றவர்கள் இப்படியெல்லாம் பேச முடிகிறது.1948 லிருந்தே ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் நீடித்து நிலைத்திருப்பதற்கு அரசின் இத்தகைய எண்ணமே பிரதான காரணம். இந்நிலையில், காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகளோடு இரகசியமாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. காஷ்மீரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பயங்கரவாதிகளை தயவுதாட்சண்யமின்றி ஒழித்துக் கட்டுவதோடு, ஹூரியத் மாநாடு, ஜெ.கே.எல்.எப்.போன்ற பிரிவினைவாத அமைப்புகளையும் கடும் நடவடிக்கைகளின் மூலம் ஒடுக்க வேண்டும்.அரசியல் சட்டம் 370 வது பிரிவின் கீழ் அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு அந்தஸ்து படிப்படியாக நீக்கப்பட வேண்டும்.இப்படிப்பட்ட உறுதியான அணுகுமுறைகள்தான் காஷ்மீர் பிரச்னைக்கு நிஜமான தீர்வைத் தருமே தவிர, பேச்சுவார்த்தைகளின் மூலம் இன்னும் கூடுதலான அதிகாரங்களையும் சலுகைகளையும் வழங்கி மாநிலத்தில் அமைதிக்கு வழிவகுக்க முடியும் என்று அரசு நினைத்தால் அது பகல் கனவாகத்தானிருக்கும். நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அது மிகப்பெரிய ஆபத்தையும் உண்டாக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment