Friday, December 25, 2009

கொள்ளையடிக்கும் ஜனநாயகம்

திருச்செந்தூர், வந்தவாசி தேர்தல் முடிவுகள் ஒரு உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கின்றன; தி.மு.க.அரசின் சாதக பாதக அம்சங்களின் அடிப்படையில் இந்த முடிவுகள் அமையவில்லை; பணம் கொடுத்து வாங்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையிலே அமைந்திருக்கின்றன மக்களின் ஏழ்மை நிலையையும் அறியாமையையும் பயன்படுத்தி தேர்தல் சமயத்தில் அவர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ2000, 3000 என வழங்கி அவர்கள்டமிருந்து ஆட்சிக்கு சாதகமான முடிவு வாங்கப்படுகிறது. திருமங்கலம் தொட்டு ந்டந்து முடிந்திருக்கும் உபதேர்தல்கள் வரை, அசாதாரண் முறையில் அதிக அளவு வாக்குகள் பதிவாகியிருப்பதும், மிக அதிக அளவு வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற்றிருப்பதும் இந்த உண்மைக்கு தெளிவான நிருபண்மாகும்.இப்போக்கு மிகவும் ஆபத்தானது. இது ஜனநாயகத்திற்கும், மக்களாட்சி தத்துவத்திற்கும் ஒரு கேன்சர் மாதிரி. தமிழகத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த தீய கலாச்சாரம் பிற மாநிலங்களுக்கும் கேன்சர் போல பரவும். பின்பு நாட்டில் ஜனநாயகம் இருக்காது; பணநாயகம்தான் இருக்கும்ஆட்சியிலிருக்கும்போது மக்களின் பணத்தை கோடி கோடியாய் கொள்ளையடித்து, அதில் ஒரு சிறு பகுதியை தேர்தலின்போது அதே மக்களுக்கு கொடுத்து, அவர்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து வாக்குகளைப் பெற்று, மீண்டும் வெற்றி பெற்று மீண்டும் மக்கள் பண்த்தை கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் இம்முறையே அரசியலிலும் ஆட்சியிலும். நீடித்திருக்க ஏற்ற எளிய முறை என அனைத்துக் கட்சிகளும் எண்ணத் தலைப்பட்டுவிடுவார்கள். பின்பு மக்களின் கதி அதோ கதிதான். தேர்தல் மூலம் அல்லாமல் ஆயுதங்கள் மூலம் மாற்றம் காண விரும்பும் சக்திகளின் ஆதிக்கம் மேலோங்க ஆரம்பிக்கும். சில உபதேர்தல்கள் முடிவை வைத்து இப்படியாகும் அப்படியகும் என்றெல்லாம் விவரிப்பது சிலருக்கு தமாஷாக தெரியலாம்; ஆனால், பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் இப்போக்கு தொடர்வது நிச்சயம் மேலே கூறிய நிலைக்குத்தான் நாட்டை கொண்டு செல்லும்.
எனவே, இந்த தீய போக்கிற்கு முடிவு கட்ட வேண்டியது அனைவரின் பொறுப்புமுமாகும். அரசியல் மற்றும் பிற வேறுபாடுகளை மறந்து அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் இதற்காக ஒன்றுபட வேண்டியது உடனடித் தேவையாகும். மக்களும் பணத்திற்காக வாக்களிக்கும் போக்கை நிறுத்த வேண்டும். பணத்திற்காக தன் ஓட்டை விற்பவர்கள் தன் தலையில் தானே மண்ணை அள்ளி கொட்டிக் கொள்கிறார்கள் என்று பொருள். அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் அதைவிட பெரிய அளவில் பொருளாதார இழப்புக்காளாவார்கள். எந்த அரசியல்வாதியும் தனது சொந்த பணத்தை ஓட்டுக்காக அளிப்பதில்லை; தாங்கள் மக்கள் வரிப்பணத்தில் கொள்ளையடித்த பணத்தில் ஒரு சிறு பகுதியைத்தான் அளிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் பணத்தின் மூலம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவுடன் கொடுத்ததை விட பன்மடங்காக மக்கள் பணத்தை மீண்டும் கொள்ளையடிப்பார்கள். என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஓட்டுக்காக பணம் கொடுத்தால் வாங்க மறுப்பது என்பது சரியான நிலைப்பாடு; ஆனால், நாட்டில் நிலவும் வறுமை அறியாமை கலந்த இச்சூழ்நிலையில் இத்தகைய நிலையை அனைத்து மக்களும் கடைப்பிடிப்பது என்பது அரிது; இயலாததும் கூட. எனவே, இப்போதைய சூழ்நிலையில் சாத்தியமானது இதுதான். பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்; ஆனால், வாக்களிக்கும்போது எதிர்த்து வாக்களியுங்கள்; தவறான, முறைகேடான அரசியல் சக்திகளுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்.

No comments:

Post a Comment