Thursday, January 28, 2010

தொடரும் விலைவாசி உயர்வு

அத்யாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டேயிருக்கின்றன. அரிசி,பருப்பு,சர்க்கரை,எண்ணெய் என மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்துப் பொருட்களின் விலைகளும் மாறி மாறி அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. விஷம் போல் ஏறும் இந்த விலைவாசி உயர்வை மத்திய மாநில அரசுகள் பெரிதாக எடுத்துக் கொள்வதுமில்லை. விலைவாசிகளை கட்டுப்படுத்த தகுந்த ந்டவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய அரசிடமிருந்துஅவ்வப்போது வரும் அறிக்கைகளை தவிர்த்து வேறு எவ்விதமான உருப்படியான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்வதில்லை. ஐ.மு.கூ.அரசின் செயல்களுக்கெல்லாம் கை தட்டியே பழக்கப்பட்டுப் போன லாலுவின். ராஷ்ட்ரிய ஜனதா தள்மும் முலயாம் சிங்கின் சமாஜ்வாடி கட்சியும் கூட விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டங்களை ந்டத்த ஆரம்பித்திருக்கின்றன். அந்த அளவிற்கு விலைவாசி உயர்வின் கடுமையிருக்கிறது. சமீபத்தில் மத்திய அமைச்சர் சரத் பவார் விலைவாசி உயர்வுகளுக்கு தான் மட்டும் பொறுப்பல்ல; பிரதமர் உட்பட அனைவருமே பொறுப்பு என்று வெளிப்படையாகவே அறிவித்தார்; இந்த அறிக்கை விலைவாசிகளை கட்டுப்படுத்துவதில் காணப்படும் அரசின் செயல்படாத் தன்மையையும் மெத்தனப்போக்கையும் அம்பலப்படுத்துகிறது. கடுமையான விலைவாசி உயர்வையும் மீறி கடந்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றிருப்பதால்,விலைவாசி உயர்வை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்ற எண்ணத்தின் விளைவுதான் இந்த மெத்தனப் போக்கிற்கு காரணம் எனில், அரசு இதற்கான கடும் விளைவுகளை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியிருக்கலாம். காற்று எப்போதும் ஒரேதிசையில் வீசிக் கொண்டிருக்காது; மக்களின் ஆதரவும் நிரந்தரமாயிருக்காது. இந்த வருடம் 7% வளர்ச்சியை, 9% வளர்ச்சியை எட்ட முடியும் என்றெல்லாம் பிரதமரும் நிதியமைச்சரும் அவ்வப்போது அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். விலைவாசிகளை கட்டுப்படுத்தாவிடில் இத்தகைய வளர்ச்சி விகிதங்களால் சாதாரண மக்களுக்கு எத்தகைய பயனுமிருக்காது. எனவே,ஏறி வரும் விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த தேவையான உடனடி ந்டவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்து மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

No comments:

Post a Comment