Thursday, July 2, 2009

ஐ.மு.கூ. அரசு மக்களுக்கு தந்த பரிசு

ஐ.மு.கூ. அரசு தனக்கு பெருவாரியாக ஓட்டளித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு, 50 நாட்களுக்குள் பெட்ரோலியப் பொருள்களின் அபரிமிதமான விலை உயர்வு என்ற பரிசை வழங்கி திக்குமுக்காட வைத்திருக்கிறது. பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ 4 ம் , டீசலுக்கு லிட்டருக்கு ரூ 2 ம் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அத்யாவசியப் பொருள்களின் கடும் விலைவாசி உயர்வால் பெரும் அவதிப்பட்டு வரும் மக்கள் தலையில் இதன் மூலம் மேலும் விலைவாசி உயர்வு என்ற சுமை ஏறப்போகிறது. உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெயின் விலை ஏறியிருப்பதால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது என அரசு கூறுகிறது. உலக மார்க்கெட்டில் இப்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 70 டாலர் என்ற அளவில் இருக்கிறது. ஆனால், உலகில் கச்சா எண்ணெய் விலை 145 டாலர் என்ற அளவில் இருந்த போது இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை எந்த அளவு இருந்ததோ அந்த அளவுக்கு அதிக பட்சமாக விலையை உயர்த்தி மக்களை கசக்கி பிழிந்திருக்கிறது அரசு. 2008 டிசம்பர் முதல் 2009 ஜனவர் வரை அதாவது கச்சா எண்ணெய் விலை 145 டாலர் என்ற அளவில் இருந்த போது பெட்ரோல் விலை சென்னையில் ரூ 49.66. டில்லியில் ரூ 45.62, கொல்கத்தாவில் ரூ 47.16 மும்பையில் ரூ 49.08 ஆக இருந்தது. இதே கால கட்டத்தில் டீசல் விலை சென்னையில் ரூ 34.95, டில்லியில் ரூ 32.06, கொல்கத்தாவில் ரூ 33.92 மும்பையில் ரூ 36.39.ஆக இருந்தது. பிறகு கச்சா எண்ணெய் விலை உலக மர்க்கெட்டில் வெகுவாக சரிந்து பேரலுக்கு 45 டாலர் என்ற் அளவை எட்டியபோது அரசு 2009 ஜனவர் 29 ல், பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது. அப்போது பெட்ரோல் விலை சென்னையில் ரூ 44.24. டில்லியில் ரூ 40.62, கொல்கத்தாவில் ரூ 44.05 மும்பையில் ரூ 44.55 ஆக குறைந்தது. இதே கால கட்டத்தில் டீசல் விலை சென்னையில் ரூ 32.82, டில்லியில் ரூ 30.86, கொல்கத்தாவில் ரூ 33.21 மும்பையில் ரூ 34.45.ஆக குறைந்தது. இப்போதைய விலை ; பெட்ரோல் விலை சென்னையில் ரூ 48.58. டில்லியில் ரூ 44.63, கொல்கத்தாவில் ரூ 48.25 ; மும்பையில் ரூ 48.76ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது . டீசல் விலை சென்னையில் ரூ 34.98, டில்லியில் ரூ 32.87, கொல்கத்தாவில் ரூ 35.03 ; மும்பையில் ரூ 36.07 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது . விலை ஓரளவே அதிகரித்திருக்கும்போது அரசு மிகவும் அதிகபட்சமாக விலையை உயர்த்தியிருக்கிறது என்பது நிதர்சணமான உண்மை. பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருக்கிற வரிகளை குறைப்பதன் மூலம் இந்த விலை உயர்வை தவிர்த்திருக்க முடியும். தேர்தல் காலமென்றால் ஆட்சி போய்விடும் என்ற அச்சத்தால் அரசு விலையை உயர்த்த தயங்கும்; ஆனால் இது தேர்தல் காலமல்ல; எனவே சகட்டு மேனிக்கு விலையை உயர்த்தியிருக்கிறது.

No comments:

Post a Comment