Monday, March 30, 2009
வாக்களிக்க பணம் கொடுத்தால் பெற்றுக் கொள்ளுங்கள்.
மிகப் பெரும் தேர்தல் திருவிழாவை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது; நாம் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் 110 கோடி மக்களின் நன்மை தீமைகளை,உயர்வு தாழ்வுகளை நிர்ணயிக்கப் போகின்றது.தேர்தல் நாளன்று தவறாது வாக்களிப்போம்.தேர்தலில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டி பணம் அளிக்கப்படலாம்; விலையுயர்ந்த பொருட்கள் கூட பரிசாக அளிக்கப்படலாம். சமீபத்தில் நடந்த திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் நடந்த உப தேர்தலின் போது ஆளும் கட்சிக்கு சாதகமாக வாக்களிப்பதற்காக ஒவ்வொரு வாக்களருக்கும் தலைக்கு ரூ 5000 மற்றும் அதற்கு மேலும் அளிக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. நடக்கவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலின் போதும் அதேபோல பணம் வாரி வழங்கப்படலாம். சாதனைகளை விட பண பலமும் படை பலமுமே இப்போதெல்லம் தேர்தலில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்குவது சரியா..? முற்றிலும் தவறு என்பதே இதற்கு பதில் என்பதை அனைவரும் அறிவார்கள்; குறிப்பிட்ட கட்சிக்கு அல்லது வேட்பாளருக்கு வாக்களிக்கக் கோரி பணம் அல்லது விலையுயர்ந்த பொருட்கள் அளிக்கப்பட்டால், அதை வாங்காமல் நிராகரிப்பது மிகவும் உயர்ந்த கொள்கை; அப்படிச் செய்பவர்கள் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.ஆனால், வேறோரு விஷயமும் இங்கு மனதில் கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. வாக்களர்களுக்கு பணம் அளிப்பவர்கள் யாரும் தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை அளிப்பதில்லை. லஞ்சம்,ஊழல், கமிஷன் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் வரிப்பணத்தின் ஒரு பகுதியைத்தான் இப்படி தேர்தலின் போது மக்களுக்கு இலஞ்சமாக அளிக்கிறார்கள்; சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிக்கும் கதையாக இப்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறுபவர்கள் அதற்குப் பிறகு தான் செலவழித்ததை விட பலமடங்கு பணத்தை மக்கள் வரிப்பணத்திலிருந்து கொள்ளையடிக்கவும் செய்கிறார்கள்.எனவே தேர்தலின் போது அரசியல்வாதிகள் மக்களுக்கு அளிக்கும் பண்ம் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணமே. எனவே,தேர்தலின் போது தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க அரசியல் கட்சிகள் பணம் அளித்தால் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள்; ஆனால் பணம் பெற்றுக் கொண்டோம் என்பதற்காக அவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டியதில்லை. மக்களிடமிருந்து கொள்லையடித்த பணத்தில் ஒரு சிறு பகுதியைத்தான் மக்களுக்கு அளிக்கிறார்கள். அதற்காக நன்றிக் கடன்பட்டு அவர்களுக்கு சாதகமாக வாக்களிக்க வேண்டிய எந்த அவசியமுமில்ல. மொத்தத்தில் இதுதான் விஷயம். வாக்களிக்க பணம் கொடுத்தால் பெற்றுக் கொள்ளுங்கள்; ஏனெனில், அது மக்களின் பணம்தான். ஆனால், நன்றிக் கடன்பட்டு அவர்க்ளுக்கே வாக்களிக்காதீர்கள்; நன்றாக யோசித்து யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ அவர்களுக்கு வாக்களியுங்கள். யார் லஞ்சம் வாங்க மாட்டார்களோ.... யார் ஊழல் செய்ய மாட்டார்களோ...யார் கமிஷன் வாங்க மாட்டார்களோ...யார் தனது குடும்பத்தின் வளர்ச்சிக்காக மட்டும் உழைக்காமல் மக்களுக்காக பாடுபடுவார்களோ..யார் இலவசங்களை மட்டும் கொடுத்து மக்களை ஏமாற்றாமால் மக்களின் வாழ்க்கைத் தர உயர்வுக்காக நல்ல நல்ல திட்டங்களை நிறைவேற்றுவர்களோ..யார் மக்களை தங்கள் அழகுப் பேச்சால் ஏமாற்றாமல் உண்மையிலேயே மக்களுக்காக உழைப்பார்களோ..யார் தேச நலன் மற்றும் தேசத்தின் பாதுகாப்பிற்காக உறுதியுடன் போராடுவார்களோ...அவர்களுக்கு வாக்களியுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment