Thursday, January 28, 2010

தொடரும் விலைவாசி உயர்வு

அத்யாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டேயிருக்கின்றன. அரிசி,பருப்பு,சர்க்கரை,எண்ணெய் என மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்துப் பொருட்களின் விலைகளும் மாறி மாறி அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. விஷம் போல் ஏறும் இந்த விலைவாசி உயர்வை மத்திய மாநில அரசுகள் பெரிதாக எடுத்துக் கொள்வதுமில்லை. விலைவாசிகளை கட்டுப்படுத்த தகுந்த ந்டவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய அரசிடமிருந்துஅவ்வப்போது வரும் அறிக்கைகளை தவிர்த்து வேறு எவ்விதமான உருப்படியான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்வதில்லை. ஐ.மு.கூ.அரசின் செயல்களுக்கெல்லாம் கை தட்டியே பழக்கப்பட்டுப் போன லாலுவின். ராஷ்ட்ரிய ஜனதா தள்மும் முலயாம் சிங்கின் சமாஜ்வாடி கட்சியும் கூட விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டங்களை ந்டத்த ஆரம்பித்திருக்கின்றன். அந்த அளவிற்கு விலைவாசி உயர்வின் கடுமையிருக்கிறது. சமீபத்தில் மத்திய அமைச்சர் சரத் பவார் விலைவாசி உயர்வுகளுக்கு தான் மட்டும் பொறுப்பல்ல; பிரதமர் உட்பட அனைவருமே பொறுப்பு என்று வெளிப்படையாகவே அறிவித்தார்; இந்த அறிக்கை விலைவாசிகளை கட்டுப்படுத்துவதில் காணப்படும் அரசின் செயல்படாத் தன்மையையும் மெத்தனப்போக்கையும் அம்பலப்படுத்துகிறது. கடுமையான விலைவாசி உயர்வையும் மீறி கடந்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றிருப்பதால்,விலைவாசி உயர்வை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்ற எண்ணத்தின் விளைவுதான் இந்த மெத்தனப் போக்கிற்கு காரணம் எனில், அரசு இதற்கான கடும் விளைவுகளை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியிருக்கலாம். காற்று எப்போதும் ஒரேதிசையில் வீசிக் கொண்டிருக்காது; மக்களின் ஆதரவும் நிரந்தரமாயிருக்காது. இந்த வருடம் 7% வளர்ச்சியை, 9% வளர்ச்சியை எட்ட முடியும் என்றெல்லாம் பிரதமரும் நிதியமைச்சரும் அவ்வப்போது அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். விலைவாசிகளை கட்டுப்படுத்தாவிடில் இத்தகைய வளர்ச்சி விகிதங்களால் சாதாரண மக்களுக்கு எத்தகைய பயனுமிருக்காது. எனவே,ஏறி வரும் விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த தேவையான உடனடி ந்டவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்து மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

Friday, December 25, 2009

கொள்ளையடிக்கும் ஜனநாயகம்

திருச்செந்தூர், வந்தவாசி தேர்தல் முடிவுகள் ஒரு உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கின்றன; தி.மு.க.அரசின் சாதக பாதக அம்சங்களின் அடிப்படையில் இந்த முடிவுகள் அமையவில்லை; பணம் கொடுத்து வாங்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையிலே அமைந்திருக்கின்றன மக்களின் ஏழ்மை நிலையையும் அறியாமையையும் பயன்படுத்தி தேர்தல் சமயத்தில் அவர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ2000, 3000 என வழங்கி அவர்கள்டமிருந்து ஆட்சிக்கு சாதகமான முடிவு வாங்கப்படுகிறது. திருமங்கலம் தொட்டு ந்டந்து முடிந்திருக்கும் உபதேர்தல்கள் வரை, அசாதாரண் முறையில் அதிக அளவு வாக்குகள் பதிவாகியிருப்பதும், மிக அதிக அளவு வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற்றிருப்பதும் இந்த உண்மைக்கு தெளிவான நிருபண்மாகும்.இப்போக்கு மிகவும் ஆபத்தானது. இது ஜனநாயகத்திற்கும், மக்களாட்சி தத்துவத்திற்கும் ஒரு கேன்சர் மாதிரி. தமிழகத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த தீய கலாச்சாரம் பிற மாநிலங்களுக்கும் கேன்சர் போல பரவும். பின்பு நாட்டில் ஜனநாயகம் இருக்காது; பணநாயகம்தான் இருக்கும்ஆட்சியிலிருக்கும்போது மக்களின் பணத்தை கோடி கோடியாய் கொள்ளையடித்து, அதில் ஒரு சிறு பகுதியை தேர்தலின்போது அதே மக்களுக்கு கொடுத்து, அவர்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து வாக்குகளைப் பெற்று, மீண்டும் வெற்றி பெற்று மீண்டும் மக்கள் பண்த்தை கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் இம்முறையே அரசியலிலும் ஆட்சியிலும். நீடித்திருக்க ஏற்ற எளிய முறை என அனைத்துக் கட்சிகளும் எண்ணத் தலைப்பட்டுவிடுவார்கள். பின்பு மக்களின் கதி அதோ கதிதான். தேர்தல் மூலம் அல்லாமல் ஆயுதங்கள் மூலம் மாற்றம் காண விரும்பும் சக்திகளின் ஆதிக்கம் மேலோங்க ஆரம்பிக்கும். சில உபதேர்தல்கள் முடிவை வைத்து இப்படியாகும் அப்படியகும் என்றெல்லாம் விவரிப்பது சிலருக்கு தமாஷாக தெரியலாம்; ஆனால், பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் இப்போக்கு தொடர்வது நிச்சயம் மேலே கூறிய நிலைக்குத்தான் நாட்டை கொண்டு செல்லும்.
எனவே, இந்த தீய போக்கிற்கு முடிவு கட்ட வேண்டியது அனைவரின் பொறுப்புமுமாகும். அரசியல் மற்றும் பிற வேறுபாடுகளை மறந்து அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் இதற்காக ஒன்றுபட வேண்டியது உடனடித் தேவையாகும். மக்களும் பணத்திற்காக வாக்களிக்கும் போக்கை நிறுத்த வேண்டும். பணத்திற்காக தன் ஓட்டை விற்பவர்கள் தன் தலையில் தானே மண்ணை அள்ளி கொட்டிக் கொள்கிறார்கள் என்று பொருள். அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் அதைவிட பெரிய அளவில் பொருளாதார இழப்புக்காளாவார்கள். எந்த அரசியல்வாதியும் தனது சொந்த பணத்தை ஓட்டுக்காக அளிப்பதில்லை; தாங்கள் மக்கள் வரிப்பணத்தில் கொள்ளையடித்த பணத்தில் ஒரு சிறு பகுதியைத்தான் அளிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் பணத்தின் மூலம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவுடன் கொடுத்ததை விட பன்மடங்காக மக்கள் பணத்தை மீண்டும் கொள்ளையடிப்பார்கள். என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஓட்டுக்காக பணம் கொடுத்தால் வாங்க மறுப்பது என்பது சரியான நிலைப்பாடு; ஆனால், நாட்டில் நிலவும் வறுமை அறியாமை கலந்த இச்சூழ்நிலையில் இத்தகைய நிலையை அனைத்து மக்களும் கடைப்பிடிப்பது என்பது அரிது; இயலாததும் கூட. எனவே, இப்போதைய சூழ்நிலையில் சாத்தியமானது இதுதான். பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்; ஆனால், வாக்களிக்கும்போது எதிர்த்து வாக்களியுங்கள்; தவறான, முறைகேடான அரசியல் சக்திகளுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்.

Monday, December 7, 2009

த‌வ‌றான‌ சிந்த‌னைக‌ள் ; விப‌ரீத‌மான‌ முடிவுக‌ள்.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா காஷ்மீர் பிரச்னை சம்பந்தமாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவினைவாத அமைப்புகள் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று கூறியிருக்கிறார். காஷ்மீர் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று; ஆனால் காஷ்மீர் சம்பந்தமாக அந்த மாநிலத்து முதலமைச்சரே அண்டை நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுவது விபரீதமாயிருக்கிறது. ஓமர் அப்துல்லாவின் இந்தக் கூற்றை மத்திய அரசு கண்டிக்காமலிருப்பது அதை விட விபரீதமாயிருக்கிறது. ஓமர் அப்துல்லா காங்கிரசின் கூட்டணியோடுதான் ஆட்சியிலிருக்கிறார் என்பதும இங்கு நினைவில் கொள்ளப்பட வேண்டும். பிற மாநிலங்களைப் போலவே ஜம்மு காஷ்மீரும் இந்தியவின் ஒரு அங்கம்; இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ பாகிஸ்தானுட‌னோ அல்ல‌து எவ‌ருட‌னோ எவ்வித‌ பேச்சுவார்த்தையும் கிடையாது; பேச்சுவார்த்தை என்ப‌து பாகிஸ்தானால் ஆக்ர‌மிக்க‌ப்ப‌ட்டிருக்கும் ஆக்ர‌மிப்பு காஷ்மீர் ச‌ம்ப‌ந்த‌மாக‌ ம‌ட்டுமே ந‌டைபெற‌ முடியும் என்ற‌ உறுதியான‌ நிலைப்பாடு வேண்டும். ஆனால், ம‌த்திய‌ அரசே, ஜ‌ம்மு காஷ்மீர் ஒரு பிர‌ச்னைக்குரிய‌ ப‌குதி என்ற‌ க‌ருத்துட‌னிருப்ப‌தால்தான் ஒம‌ர் அப்துல்லா போன்ற‌வ‌ர்க‌ள் இப்ப‌டியெல்லாம் பேச‌ முடிகிற‌து.1948 லிருந்தே ஜ‌ம்மு காஷ்மீரில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌மும் பிரிவினைவாத‌மும் நீடித்து நிலைத்திருப்ப‌த‌ற்கு அர‌சின் இத்த‌கைய‌ எண்ண‌மே பிர‌தான‌ கார‌ண‌ம். இந்நிலையில், காஷ்மீரில் பிரிவினைவாத‌ அமைப்புக‌ளோடு இர‌க‌சிய‌மாக‌ பேச்சுவார்த்தை ந‌ட‌ந்து வ‌ருவ‌தாக‌ செய்திக‌ள் கூறுகின்ற‌ன‌. காஷ்மீரில் செய‌ல்ப‌ட்டுக் கொண்டிருக்கும் ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளை த‌ய‌வுதாட்ச‌ண்ய‌மின்றி ஒழித்துக் க‌ட்டுவ‌தோடு, ஹூரிய‌த் மாநாடு, ஜெ.கே.எல்.எப்.போன்ற‌ பிரிவினைவாத‌ அமைப்புக‌ளையும் க‌டும் ந‌ட‌வ‌டிக்கைகளின் மூலம் ஒடுக்க‌ வேண்டும்.அர‌சிய‌ல் ச‌ட்ட‌ம் 370 வ‌து பிரிவின் கீழ் அளிக்கப்ப‌ட்டிருக்கும் சிற‌ப்பு அந்த‌ஸ்து ப‌டிப்ப‌டியாக‌ நீக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.இப்படிப்பட்ட உறுதியான அணுகுமுறைகள்தான் காஷ்மீர் பிர‌ச்னைக்கு நிஜ‌மான‌ தீர்வைத் த‌ருமே த‌விர‌, பேச்சுவார்த்தைக‌ளின் மூல‌ம் இன்னும் கூடுத‌லான‌ அதிகார‌ங்க‌ளையும் ச‌லுகைக‌ளையும் வ‌ழ‌ங்கி மாநில‌த்தில் அமைதிக்கு வ‌ழிவ‌குக்க‌ முடியும் என்று அர‌சு நினைத்தால் அது ப‌கல் க‌ன‌வாக‌த்தானிருக்கும். நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அது மிக‌ப்பெரிய‌ ஆப‌த்தையும் உண்டாக்கும்.

Monday, October 5, 2009

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று. இம்மாநிலத்தில் இஸ்லாமியர்கள் ஓரளவு அதிகமாயிருக்கிற ஒரே காரணத்தை அடிப்படையாக வைத்து பாகிஸ்தான் இம்மாநிலத்தை பிரச்னைக்குரிய பகுதியாக சித்தரித்து, இதை இந்தியாவிலிருந்து துண்டாட பல்வேறு சதிவேலைகளில் ஈடுபட்டு வருகின்றது. கடந்த பல வருடங்களாக பாகிஸ்தான் இஸ்லாமிய ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளுக்கு த‌ன் நாட்டில் செய‌ல்ப‌டும் ப‌யிற்சி முகாம்க‌ளில் ஆயுத‌ப் ப‌யிற்சி அளித்து அவ‌ர்க‌ளை காஷ்மீருக்குள் ஊடூருவ‌ வைத்து ப‌ய‌ங்க‌ர‌வாத‌ச் செய‌ல்க‌ளில் ஈடுப‌ட‌ வைக்கிறது. சமீப காலமாக சீனா போன்ற நாடுகளும் காஷ்மீரை துண்டாட பல்வேறு காரியங்களில் ஈடுபட்டு வருகின்றன. சீனா காஷ்மீர் பகுதியிலிருந்து தன் நாட்டிற்குள் பயணம் செய்ப‌வ‌ர்க‌ளுக்கு த‌னி விசா வ‌ழ‌ங்குகிற‌து; இதும‌ட்டுமின்றி, லிபிய‌ அதிப‌ர் க‌டாபி ஐ.நா. பொதுப் பேர‌வை கூட்ட‌த்தில், காஷ்மீர் த‌னி நாடாக‌ வேண்டும் என்று உரையாற்றியிருக்கிறார்; இஸ்லாமிய‌ நாடுக‌ளின் கூட்ட‌மைப்பு காஷ்மீருக்கென்று த‌னி தூத‌ரை அறிவித்திருக்கிற‌து. ம‌த்திய‌ ஐ.மு.கூ. அர‌சின் த‌வ‌றான‌ ம‌ற்றும் ப‌ல‌வீன‌மான‌ கொள்கைக‌ளும் செய‌ல்பாடுக‌ளுமே இந்நிலைக்கு பிர‌தான‌ கார‌ண‌ம் என்று கூறினால் அதில் பெரும் த‌வ‌றேதுமிருக்க‌ முடியாது. பிற‌ மாநில‌ங்க‌ளைப் போல‌வே காஷ்மீரும் இந்தியாவின் பிரிக்க‌ முடியாத‌ ஒருங்கிணைந்த‌ ப‌குதியாகும். இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ எவ்வித‌ பேச்சுவார்த்தையும் எவ்ருட‌னும் கிடையாது என்ற‌ உறுதியான‌ நிலைப்பாடு வேண்டும்; மேலும், பாகிஸ்தானால் ஆக்ர‌மிக்க‌ப்ப‌ட்டிருக்கும் காஷ்மீர் ப‌குதியும் இந்தியாவுக்குரிய‌தாகும்; அதை மீட்ப‌த‌ற்குரிய‌ அனைத்து ந‌ட‌வ‌டிக்கைக‌ளும் மேற்கொள்ள‌ப்ப‌ட‌ வேண்டும். காஷ்மீர் ப‌குதியில் செய‌ல்ப‌ட்டுக் கொண்டிருக்கிற‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ அமைப்புக‌ளை க‌டுமையான‌ இராணுவ‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளின் மூல‌ம் நிர்மூல‌மாக்குவ‌தோடு, பிரிவினைக்கு ஆத‌ர‌வான‌ ம‌க்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌ க‌ட்சி, அனைத்துக் க‌ட்சி ஹூரிய‌த் மாநாடு, ஜெ.கெ.எல்.எப். போன்ற‌ அமைப்புக‌ள் மீதும் கடும் ந‌ட‌வ‌டிக்கைகள் மேற்கொள்ள‌ வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு சிற‌ப்பு அந்த‌ஸ்து அளிக்கிற‌ அர‌சிய‌ல் ச‌ட்ட‌த்தின் 370 வ‌து பிரிவை சிறிது சிறிதாக‌ நீர்த்துப் போக‌ வைத்து ஓரிரு வ‌ருட‌ங்க‌ளில் முற்றிலுமாக‌ நீக்கப்ப‌ட‌ வேண்டும். இதுபோன்ற‌ உறுதியான‌ ந‌ட‌வ‌டிக்கைகளினாலேயே ஜம்மு காஷ்மீரை பாதுகாக்க முடியும். தேசத்தின் எல்லைகளை பாதுகாப்பதிலும், ஒருமைப்பாட்டை நிலை நிறுத்துவதிலும் எவ்வித சமரசத்திற்கும் இடமற்ற கடுமையான அணுகுமுறை வேண்டும். இதன் மூலமே நமது எதிரிகளை நாம் புறம் தள்ளி நமது நாட்டை வல்லரசாக்க முடியும்.