சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வதேரா தேர்தல் கூட்டத்தில் பேசும் போது, எனது தம்பி ராகுல் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்தான் என்று குறிப்பிட்டிருக்கிறார். சோனியா காந்தி பேசும்போது, ராகுல் இப்போது பிரதமராக மாட்டார்; வருங்காலத்தில் பிரதமராவார் என்று கூறியிருக்கிறார்.
ராகுல் காந்தியோ எனக்கு இன்னும் போதுமான அனுபவம் கிடைக்கவில்லை; எனவே இப்போது பிரதமராக மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
இந்தக் குடும்பம் ஏதோ மன்னர் குடும்பம் போலவும் இந்தியா ஏதோ அவர்கள் குடும்பத்திற்கு சொந்தமான நாடு என்பது போலவும் இவர்களது பேச்சுக்கள் அமைந்திருக்கின்றன. இவர்களது இத்தகைய ஆணவப் பேச்சுக்களுக்கும், ஆணவ மனப்பான்மைக்கும் இந்தியர்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். காங்கிரஸ்காரர்கள் இந்தக் குடும்பத்திற்கு காலம் காலமாக கொத்தடிமைகளாக இருந்து கொண்டிருப்பாதால்தான் இவர்களிடமிருந்து இத்தகைய பேச்சுக்கள் வெளிப்படுகின்றன. ஆனால் ஒரு விஷயம் தெளிவானது; காங்கிரஸ்காரர்கள்தான் சோனியா குடும்பத்தின் கொத்தடிமைகளே தவிர மக்கள் அல்ல; இந்தியா மிகப்பெரும் தேசம்; ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த நாட்டை ஆளும் தகுதியுண்டு. 2001 ல் காங்கிரசிலிருந்த முதுகெலும்புள்ள ஆண்மகனான நரசிம்மராவ் பிரதமராயிருந்தபோதே இந்தக் குடும்பத்தின் ஆதிக்கத்திற்கு மக்கள் முடிவு கட்டிவிட்டார்கள். சுயமரியாதை அற்ற, தன்மானமிழந்த சில காங்கிரஸ்காரர்கள் இன்னும் இந்தக் குடும்பத்தின் கொத்தடிமைகளாகவே இருந்து கொண்டிருப்பதால், சோனிய குடும்பத்தினர் நாட்டின் பிரதமர் பதவி தங்கள் குடும்பச் சொத்து என்று கனவெல்லாம் கண்டு கொண்டிருக்கக் கூடாது. அது என்றுமே கனவாகத்தான் இருக்கும்.
Sunday, April 26, 2009
Sunday, April 12, 2009
பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர்
பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார்.டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர்.பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே சமயம், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார்.சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6-ல் காலமானார். இந்தியாவின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அவரை பெருமையுடன் நினைவுகூர்வோம்.
Tuesday, April 7, 2009
ஏப்ரல் 14. தமிழ்ப் புத்தாண்டு தினம்
இலங்கை இராணுவத்தின் குண்டுவீச்சில் சிக்கி இலங்கைத் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டு வருகிறது.அவர்கள் தங்கள் சொந்த வீடு நிலங்களை துறந்து, காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிவதோடு,பல்வேறு நாடுகளில் அகதிகளாகவும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை காப்பாற்றவும், அவர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை பெற்றுத்தர வேண்டிய இந்திய அரசு தனது கடமையிலிருந்து தவறியிருப்பதோடு, இலங்கை அரசுக்கு மறைமுக உதவிகளையும் செய்து வருகிறது. இந்த தமிழ் புத்தாண்டு தினத்தில், சகோதர இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவை தெரிவிக்க உறுதி கொள்வோம்..
Subscribe to:
Posts (Atom)